உலக டேபிள் டென்னிஸ் போட்டியில் அரை இறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் தியா சித்தலே, ஸ்ரீ ஜா அகுலா ஜோடி. 
விளையாட்டு

உலக டேபிள் டென்னிஸ் போட்டி: அரை இறுதியில் தியா, ஸ்ரீஜா ஜோடி

செய்திப்பிரிவு

ஜாக்ரெப்: உலக டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் தியா சித்தலே, ஸ்ரீஜா அகுலா ஜோடி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

குரோஷியா நாட்டின் ஜாக்ரெப் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் மணிகா பத்ரா, குரோஷியாவின் ஹனா அரபோவிச்சுடன் மோதினார். இதில் மணிகா பத்ரா 6-11, 11-6, 11-3, 11-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் மணிகா பத்ரா, உலகத் தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ள கொரியாவின் ஷின் யுபினுடன் மோதுகிறார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி 5-11, 5-11, 6-11 என்ற நேர் செட்டில் கொரியாவின் யங் ஹாவிடம் தோல்வி அடைந்தார். ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சரத் கமல் 9-11, 11-5, 7-11, 11-8, 11-7 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் லிலியன் பார்டெட்டை தோற்கடித்தார்.

மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தியா சித்தலே, ஸ்ரீஜா அகுலா ஜோடி 9-11, 12-10, 11-7, 5-11, 11-8 என்ற செட் கணக்கில் சிங்கப்பூரின் ஸின் ரூ வாங், ஜியான் ஜெங் ஜோடியை வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

SCROLL FOR NEXT