சனத் ஜெயசூர்யா | கோப்புப்படம் 
விளையாட்டு

கிரிக்கெட் உலகின் சிறந்த ஓப்பனர்களில் ஒருவர்: சனத் ஜெயசூர்யா பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு!

செய்திப்பிரிவு

கிரிக்கெட் விளையாட்டின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவர் இலங்கையை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா. அவருக்கு இன்று பிறந்தநாள். அவரது அதிரடி பேட்டிங் திறன் குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் அறிவர். தன் அணிக்கு தேவைப்படும் நேரங்களில் பந்து வீசி விக்கெட்டையும் வீழ்த்துபவர். ரிச்சர்ட்ஸ், சச்சினை அடுத்து மாஸ்டர் பிளாஸ்டர் எனும் பெயரை பெற்ற வீரர். இதே நாளில் கடந்த 1969-ல் இலங்கையில் அவர் பிறந்தார்.

1996 உலகக் கோப்பை வென்ற இலங்கை அணியில் இவரது பங்கு பிரதானமானது. அதே போல் 2007 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2009 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடிய இலங்கை அணியில் விளையாடியவர். கடந்த 2011-ல் ஓய்வு பெற்றார். தனது அதிரடி பேட்டிங்கின் ஊடாக ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தியவர்.

பாயிண்ட் திசையில் லாஃப்ட் ஷாட் ஆடுவது அவரது டிரேட்மார்க் ஷாட். இலங்கை அணியின் மேட்ச் வின்னராக அசத்தியவர். 1996 உலகக் கோப்பையில் ஆல்-ரவுண்ட் செயல்பாட்டுக்காக தொடர் நாயகன் விருதை வென்றிருந்தார். பாராளுமன்ற உறுப்பினராகவும் இயங்கியுள்ளார்.

ஜெயசூர்யாவின் சாதனைகள்

  • டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மொத்தம் 586 சர்வதேச போட்டிகளில் விளையாடி, 21,032 ரன்கள் குவித்துள்ளார். 440 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
  • சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டக்காரராக 19,298 ரன்கள் எடுத்துள்ளார். இந்த வரிசையில் அடுத்தடுத்த இடங்களில் கெயில், கிரேம் ஸ்மித், ஹய்னஸ், சேவாக் ஆகியோர் உள்ளனர். இந்த சாதனை இன்னும் தகர்க்கப்படவில்லை.
  • ஒருநாள் கிரிக்கெட்டில் 10,000+ ரன்கள் மற்றும் 300+ விக்கெட்டுகளை கைப்பற்றிய கிரிக்கெட் வீரர்.
  • கிரிக்கெட் உலகக் கோப்பையில் 1,000+ரன்கள் மற்றும் 30+ விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்.
  • 50 பந்துகளுக்கு குறைவாக விளையாடி சதம் விளாசிய முதல் சர்வதேச கிரிக்கெட் வீரர். 1996-ல் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 48 பந்துகளில் சதம் பதிவு செய்தார்.
  • இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் பதிவு செய்துள்ளார்.
  • ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக முதல் சதம் பதிவு செய்த வீரர்.
SCROLL FOR NEXT