சென்னை: கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற நினைவுகளை பகிர்ந்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். இதனை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) அவர் தெரிவித்துள்ளார்.
மெல்போர்னில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 159 ரன்கள் குவித்தது. 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது. கடைசி பந்து வரை சென்ற இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
31 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்து இந்தியா தடுமாறியது. பின்னர் கோலியும், பாண்டியாவும் இணைந்து அபார கூட்டணி அமைத்தனர். கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 2 விக்கெட்டுகளை இந்தியா இழந்தது. அஸ்வின் வெற்றிக்கான அந்த ஒற்றை ரன்னை எடுத்து கொடுத்தார்.
“மிகவும் கடினமான வேலையை நான் செய்ய வேண்டி இருந்த காரணத்தால் களத்துக்குள் செல்லும் போதே தினேஷ் கார்த்திக்கை சபித்தேன். (தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்த காரணத்தால் தான் அஸ்வின் பேட் செய்ய களமிறங்கினார்) அந்த தருணத்தின் மகத்துவத்தை நான் உணர்ந்தேன். அதுபோல ரசிகர்கள் அதிகம் நிரம்பி இருந்த மைதானத்தை நான் பார்த்தது இல்லை. அந்த ஒரு பந்தை நான் ஆட எனக்கு ஏழு ஆப்ஷன் கொடுத்தார் கோலி.
இன்ஸைட் அவுட் ஆடு, பவுலரை கிளிப் செய், இறங்கி வந்து ஆடு என நிறைய சொன்னார். இந்த ஷாட் அனைத்தும் ஆடுவேன். அப்போது விராட் கோலியை நான் பார்த்தேன். அவர் மிகவும் கூர்மையாக ஆட்டத்தை கவனித்துக் கொண்டிருந்தார். எனது பார்வையில் அவர் ஏதோ வேற்று கிரகத்தில் இருந்து பூமிக்கு வந்தது போல இருந்தது.
நவாஸ், ஒய்ட் வீசியதும் ஆட்டம் எங்கள் பக்கம் என்பதை அறிந்தேன். அன்றைய தினம் அவர் அதிக ரன்னும் கொடுத்திருந்தார். இன்-ஃபீல்டை கிளியர் செய்தேன். அந்த வெற்றி தருணத்தை நான் சமூக வலைதளங்களில் பார்க்கும் போதெல்லாம் எனக்குள் ஒரு எண்ணம் எழும். ஒருவேளை பந்து கிரிப் ஆகி, எனது பேடில் பட்டிருந்தால் என்ன ஆகி இருக்கும் என எண்ணுவேன். இறுதியில் அந்த ஆட்டம் என்னால் பினிஷ் செய்யப்பட்டது. விராட் கோலி அபார இன்னிங்ஸ் ஆடி இருந்தார்” என அஸ்வின் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2023 தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அக்டோபர் 15-ம் தேதி அன்று அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் பலப்பரீட்சை செய்ய உள்ளன.