சென்னை: எதிர்வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரையில் இந்தியாவில் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் சென்னை - சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் மொத்தம் 5 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த சூழலில், வடகிழக்கு பருவமழை காலம் என்பதால் அக்டோபர் மாதம் சென்னையில் போட்டியை நடத்துவது ரிஸ்க் என்று சொல்லப்படுகிறது.
உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சென்னையில் வரும் அக்டோபர் 8-ம் தேதி விளையாட உள்ளது. இந்நிலையில், இந்த அட்டவணை சார்ந்து ரசிகர் ஒருவர் தனது கருத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
சென்னை - சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டிகள்
“இதில் எத்தனை போட்டிகள் மழையால் பாதிக்கப்படும் என்பதை எண்ணி ஆச்சரியம் கொள்கிறேன். அக்டோபர் இரண்டாவது வாரத்திற்கு பிறகு ரிஸ்க் அதிகம் என உணர்கிறேன்” என ரமேஷ் என்ற ட்விட்டர் பயனர் தெரிவித்துள்ளார். அவர் சொல்வதை போலவே அக்டோபர் மாதம் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை காலம் என்பது குறிப்பிடத்தக்கது.
மழையை சமாளிக்க சென்னை - சேப்பாக்கம் மைதான பராமரிப்பாளர்கள் தயாராக இருக்க வேண்டும். அண்மையில் முடிந்த ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில் மழை குறுக்கிட்டது. பின்னர் ஈரப்பதம் இருந்த காரணத்தால் மைதான பராமரிப்பாளர்கள் களத்தில் அயராது உழைத்து, போட்டி நடைபெற உதவினர் என்பது குறிப்பிடத்தக்கது.