விளையாட்டு

தேசிய மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது தமிழக அணி!

செய்திப்பிரிவு

லூதியானா: நடப்பு தேசிய மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது தமிழக கால்பந்து அணி. ரயில்வே அணிக்கு எதிராக இன்று (ஜூன் 26) நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் இந்த தொடரில் இரண்டாவது முறையாக தமிழக அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

கடந்த 2017-18 சீசனில் தமிழக அணி தேசிய சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றிருந்தது. நடப்பு சீசனுக்கான அரையிறுதிப் போட்டி தொடங்கிய முதல் 3 நிமிடங்களில் தமிழக அணிக்காக முதல் கோலை பதிவு செய்து அசத்தினார் பிரியதர்ஷினி. இருந்தும் முதல் பாதியில் தடுபாட்டத்தை வலுவாக்கியது ரயில்வே அணி. அதனால் தமிழக வீராங்கனைகளால் மேற்கொண்டு கோல் பதிவு செய்ய முடியாமல் போனது.

தொடர்ந்து இரண்டாவது பாதியில் ஓன்-கோல் அடித்து ரயில்வே அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார் சுப்ரியா ரவுத்ரி. அதன் மூலம் 2-0 என தமிழகம் முன்னிலை பெற்றது. தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாடி வரும் இந்துமதி கதிரேசன் கோல் பதிவு செய்ய 3-0 என முன்னிலை பெற்றது தமிழகம்.

இருந்தும் கூடுதல் நேரத்தில் ரயில்வே அணிக்காக டிபர்னிதா டே, கோல் பதிவு செய்தார். நடப்பு சீசனில் தமிழக அணிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் கோல் இது. வரும் புதன்கிழமை அன்று அமிர்தசரஸில் இறுதிப் போட்டி நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT