சேலம்: நடப்பு தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் சீசனின் லீக் போட்டிகள் கோவை, திண்டுக்கல் போன்ற ஊர்களை அடுத்து சேலத்திலும் நடைபெற்று வருகிறது. நேற்று (ஞாயிறு) சேலத்தில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் பால்சி திருச்சி அணிகள் விளையாடின. இதில் திருச்சி அணிக்காக விளையாடி வரும் நடராஜன் களம் கண்டார். அவருக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்திருந்தனர்.
32 வயதான நடராஜன் சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியை சேர்ந்தவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் கடந்த 2017-ல் விளையாட தொடங்கினார். 2018 முதல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். டொமஸ்டிக் கிரிக்கெட்டில் 2015 முதல் தமிழ்நாடு அணிக்காக விளையாடி வருகிறார்.
இடது கை வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் ‘யார்க்கர்’ வீசுவதில் வல்லவர். கடந்த 2020-ல் ஆஸ்திரேலிய நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்ற இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்தார். ஒருநாள் கிரிக்கெட், டி20 கிரிக்கெட், டெஸ்ட் கிரிக்கெட் என மூன்று வடிவ கிரிக்கெட்டில் அதே பயணத்தில் அறிமுக வீரராக விளையாடினார். கடைசியாக கடந்த 2021-ம் ஆண்டில் அவர் இந்திய அணிக்காக விளையாடி இருந்தார்.
இந்த சூழலில் முதல் முறையாக தனது சொந்த ஊரான சேலத்தில் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று விளையாடினார். மண்ணின் மைந்தனான அவருக்கு உள்ளூர் ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர். இந்தப் போட்டியை காண நடராஜனின் ரசிகர்கள் மைதானத்துக்கு அதிகளவில் திரண்டனர். அவரது குடும்பத்தினரும் இந்தப் போட்டியை நேரில் கண்டு ரசித்தனர். கடந்த டிஎன்பிஎல் சீசனை காயம் காரணமாக அவர் மிஸ் செய்திருந்தார்.
அண்மையில் தான் தனது சொந்த ஊரில் நடராஜன் கிரிக்கெட் மைதானத்தை திறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் பால்சி திருச்சி அணிகள் விளையாடிய 17-வது லீக் போட்டியில் திருப்பூர் அணி வெற்றி பெற்றது.