சென்னை: டிஎன்பிஎல் டி20 லீக் கிரிக்கெட் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தியது.
7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று 2 ஆட்டங்கள் நடைபெற்றன.
சேலத்தில் நேற்று பிற்பகல் 3.15 மணிக்கு நடைபெற்ற முதல் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின.
முதலில் விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. கேப்டன் பாபாஅபராஜித் அதிரடியாக விளையாடி 51 பந்துகளில் 79 ரன்களைக் குவித்தார். ஹரீஷ் குமார் 20 ரன்களும், என். ஜெகதீசன் 15 ரன்களும், சஞ்சய் யாதவ் 15 ரன்களும் எடுத்தனர். நெல்லை அணி சார்பில் பொய்யாமொழி 3, லக்ஷய் ஜெயின் 2 விக்கெட்களைச் சாய்த்தனர்.
பின்னர் விளையாடிய நெல்லை அணி 18.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
அணியின் கேப்டன் அருண் கார்த்திக் 61 பந்துகளில் 104 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது ஸ்கோரில் 10 பவுண்டரிகளும், 5 சிக்ஸர்களும் அடங்கும். நிரஞ்சன் 24 ரன்களும், ரித்திக் ஈஸ்வரன் 26 ரன்களும் சேர்த்தனர். இந்த வெற்றியின் மூலம் நெல்லை அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.