உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் மண்ணைக்கவ்விய பிறகே அடுத்ததாக ஐசிசி கோப்பையை வெல்லும் வாய்ப்பு இந்தியாவுக்கு இங்கு நடைபெறும் ஐசிசி 50 ஒவர் உலகக்கோப்பையே. இப்போதே அதற்கான பில்ட்-அப் தொடங்கி விட்டது. அணியில் யார் இருக்க வேண்டும், அணித்தேர்வு எப்படி அமைய வேண்டும், பவுலர்கள் யார், ஆல்ரவுண்டர்கள் யார் என்ற விஷயங்கள் ஊடகங்களில் விவாதிக்கப்படத் தொடங்கி விட்டன.
இதில் குறிப்பாக ஸ்ரேயஸ் அய்யர் உலகக்கோப்பைக்குள் மீள்வது கடினம் என்பதால் சூர்யகுமார் யாதவை அணியில் வைத்துக் கொள்ள வேண்டுமென்று ஒரு சில தரப்பும், அய்யய்யோ அவரா, வேண்டவே வேண்டாம், 3 டக்குகளை அடுத்தடுத்து அடித்து ஹாட்ரிக் டக் நாயகனான அவர் எதற்கு என்று இன்னொரு தரப்பினரும் விவாதித்து வருகின்றனர்.
சூர்யகுமார் யாதவ் இதுவரையில் ஒருநாள் போட்டிகளில் 21 இன்னிங்ஸ்களில் வெறும் 433 ரன்களை 24.05 என்ற சராசரியில் எடுத்துள்ளார். இரண்டேயிரண்டு அரைசதங்கள்தான். ஸ்ட்ரைக் ரேட் 102 என்று வைத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட்டும் சூர்யகுமார் டி20 அதிரடிக்கு இணையாக வைத்துப் பார்த்து எண்ணத்தக்கதல்ல என்ற நிலையே உள்ளது. அடித்த அரைசதங்களும் சொத்தை பவுலிங் கொண்ட இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராகவே.
இந்நிலையில் அவரை அணியில் எடுத்தால் எப்படி அவரை பயன்படுத்துவது என்பது பற்றி விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அவரை 4ம் நிலையில் இறக்கி விட்டால் அவர் கடைசி வரையில் நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் அப்படி அவரால் ஆட முடியாது ஏனெனில் அவரிடம் நல்ல டிபன்ஸ் கிடையாது. சிங்கிள்கள், இரண்டுகள் என்று ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்யும் திறமையும் அவருக்கு அதிகமாக இல்லை. எனவே கீழ் ஆர்டரில் இறக்கி கடைசி கட்ட அதிரடி வீரராகப் பயன்படுத்தலாம் என்ற திட்டங்கள் இருந்து வருகின்றன.
சஞ்சய் மஞ்சுரேக்கர் கட்டாயம் சூர்யகுமார் யாதவ் அணிக்குழுவில் இருக்க வேண்டும். லெவனில் அவர் இருப்பதை போட்டிக்குப் போட்டி தீர்மானித்துக் கொள்ளலாம் என்பதைப் போல் கூறுகிறார். இது தொடர்பாக சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறியதாவது: “சூர்யகுமார் யாதவ்வை உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பயன்படுத்த வேண்டுமென்றால் அதிரடி கீழ்வரிசை பேட்டராக பயன்படுத்திக் கொள்ளுங்கள். அவர் ஏன் இப்போதெல்லாம் சரியாக ஆடுவதில்லை என்பதற்கான காரணங்கள் எனக்குத் தெரியவில்லை. அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கொடுத்தால் அவர் தன் அதிரடி பாணியை மீட்டெடுக்க முடியும்.
சூர்யகுமார் யாதவ் ஒரே பாணியில் மட்டுமே ஆடுபவராகத் தெரியவில்லை. அவர் தரையோடு தரையாகவும் ஷாட்களை ஆடுவதை பார்த்திருக்கிறேன். ஆனால் இன்னொரு கேள்வியும் இருக்கிறது. கீழ்வரிசையில் அவரை அதிரடி வீரராக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றால் அதற்கான சூழ்நிலை எத்தனைப் போட்டிகளில் ஏற்படப்போகிறது என்ற கேள்வியும் உள்ளது.
அவர் ஒரு கிரேட் டி20 வீரர். எனவே அவரது டி20 திறமைகளை முடக்குமாறு எதையும் செய்து விடக்கூடாது. அவர் அடித்த தொடர் டக்குகளுக்குப் பிறகு டி20 கிரிக்கெட்டிலும் அவர் தடுமாறினார். ஆகவே இத்தனையும் கணக்கிலெடுத்துக் கொண்டு அவரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற செயல்திட்டம் இல்லாது அவரை எடுப்பது சரியாக இருக்காது. அவர் அவசியம்தான். ஆனால் அவருக்கு கொடுக்கப்படும் ரோலைப்பொறுத்து அவர் 50 ஒவர் கிரிக்கெட்டுக்குத் தகுதியானவரா என்பதைப் பார்க்க வேண்டும்” இவ்வாறு கூறினார் சஞ்சய் மஞ்சுரேக்கர்.