இந்திய அணி வீரர்கள் 
விளையாட்டு

மறக்குமா நெஞ்சம் | கடந்த 2013-ல் இதே நாளில் சாம்பியன்ஸ் டிராபி பட்டம் வென்ற இந்திய அணி!

செய்திப்பிரிவு

சென்னை: கடந்த 2013-ல் இதே நாளில் இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தி இருந்தது. அதன் பின்னர் இந்திய அணி இன்று வரை ஐசிசி நடத்தும் தொடர்களில் பட்டம் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தோனி தலைமையிலான இந்திய அணியும், அலைஸ்டர் குக் தலைமையிலான இங்கிலாந்து அணியும் இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடின. இந்தப் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. மழை காரணமாக இந்தப் போட்டி 20 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது.

இந்திய அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது. இந்திய அணிக்காக கோலி, 34 பந்துகளில் 43 ரன்கள் எடுத்திருந்தார். ஜடேஜா 33 ரன்களும், தவான் 31 ரன்களும் எடுத்தனர். 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இங்கிலாந்து விரட்டியது. மழை, சொந்த மண்ணில் நடைபெறும் போட்டி என இங்கிலாந்து அணி சாதகத்துடன் ரன் சேஸிங்கை தொடங்கியது. இருந்தும் இங்கிலாந்து அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. ஆனாலும் இயன் மோர்கன் மற்றும் ரவி போபாரா இணைந்து 64 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

திருப்புமுனை கொடுத்த இஷாந்த் சர்மா: கடைசி 3 ஓவர்களில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 28 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் மோர்கன் மற்றும் போபாரா இருந்தனர். அந்தச் சூழலில் 18-வது ஓவரை வீசும் பொறுப்பை இஷாந்த் சர்மா வசம் கொடுத்தார் கேப்டன் தோனி. அது குறித்து அப்போது வர்ணனையாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.

முதல் பந்தில் இஷாந்த் ரன் கொடுக்கவில்லை. அடுத்த பந்தில் சிக்ஸர் விளாசினார் மோர்கன். அதற்கு அடுத்து இரண்டு வொய்ட் வீசினார். அதன் பின்னர் சரியாக பந்து வீசி மோர்கன் மற்றும் போபாரா விக்கெட்டுகளை கைப்பற்றினார் இஷாந்த். அவர்கள் கொடுத்த இரண்டு கேட்ச்சையும் அஸ்வின் கைப்பற்றி இருந்தார்.

கடைசி இரண்டு ஓவர்களில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், தோனி அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான ஜடேஜா மற்றும் அஸ்வினை பந்து வீச சொல்லி பணித்தார். அதில் ஜடேஜா 19-வது ஓவரில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதோடு 4 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார். கடைசி ஓவரில் அஸ்வின் 9 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்தது. அதன் மூலம் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தோனி: “நாங்கள் பேட் செய்த போது சுமார் 130 ரன்கள் நெருங்க வேண்டும் என சொல்லி இருந்தேன். நாம் நம்பர் 1 அணியாக உள்ளோம். நமது ஆட்டமும் அப்படி தான் இருக்க வேண்டும். எங்கள் அணி வீரர்கள் ஆட்டத்தில் இருந்த அழுத்தத்தை சிறப்பாக கையாண்டனர்” என வெற்றிக்கு பிறகு தோனி சொல்லி இருந்தார். இந்தத் தொடரில் தொடர் நாயகன் விருதை தவான் வென்றார். இந்த தொடரில் அதிக ரன் எடுத்த பேட்ஸ்மேனும் அவர் தான். மொத்தம் 363 ரன்கள் குவித்திருந்தார். ஜடேஜா (12 விக்கெட்டுகள்) அதிக விக்கெட் எடுத்த பவுலராக ஜொலித்தார்.

SCROLL FOR NEXT