புலவாயோ: ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்று வரும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தகுதி சுற்று தொடருக்கான குரூப் சுற்றுப் போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிராக கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது ஸ்காட்லாந்து கிரிக்கெட் அணி. அந்த அணிக்கு மேட்ச் வின்னராக ஜொலித்தார் மைக்கேல் லீஸ்க்.
எதிர்வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் இந்தியாவில் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்க உள்ள 8 அணிகள் ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 2 அணிகள் உலகக் கோப்பை தகுதிச் சுற்று மூலம் உறுதி செய்யப்பட உள்ளது.
அந்த 2 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதி சுற்று ஜிம்பாப்வே நாட்டில் தற்போது நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் இதில் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதில் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் இரண்டு அணிகள் உலகக் கோப்பை தொடரில் விளையாட தகுதி பெறும்.
இந்தத் தொடரில் குரூப் சுற்றுப் போட்டியில் அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் நேற்று பலப்பரீட்சை செய்தன. முதலில் பேட் செய்த அயர்லாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து வீரர் கர்டிஸ் கேம்பர், 108 பந்துகளில் 120 ரன்கள் எடுத்தார். ஜார்ஜ் டோக்ரெல், 69 ரன்கள் எடுத்திருந்தார். அதனால் 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஸ்காட்லாந்து விரட்டியது.
ஸ்காட்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ்டோபர் மெக்பிரைட், 60 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அந்த அணி 33.5 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்து தடுமாறியது. 8-வது விக்கெட்டிற்கு மைக்கேல் லீஸ்க் மாறும் மார்க் வாட் இணைந்து 82 ரன்கள் எடுத்தனர். மார்க், 43 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்னர் வந்த சஃப்யான் ஷெரீப் உடன் 50 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் லீஸ்க்.
கடைசி ஓவரில் ஸ்காட்லாந்தின் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் பவுண்டரியும், இரண்டாவது பந்தில் சிங்கிளும் எடுத்தார் லீஸ்க். மூன்றாவது பந்தில் ஷெரீப் ஆட்டமிழந்தார். நான்காவது பந்தை எதிர்கொண்ட கிறிஸ் சோல், ரன் எடுக்கவில்லை. ஐந்தாவது பந்தில் பைஸில் ரன் எடுத்தார். கடைசி பந்தில் ஸ்காட்லாந்து வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டது. அந்த பந்தை பவுண்டரிக்கு விரட்டி த்ரில் வெற்றி தேடி தந்தார் லீஸ்க்.
அவர் 61 பந்துகளில் 91 ரன்கள் எடுத்தார். 9 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் இதில் அடங்கும். ஆட்ட நாயகன் விருதையும் அவர் தான் வென்றார். ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து வெற்றி பெற்றது. 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்தது ஸ்காட்லாந்து. இந்த தொடரில் அயர்லாந்து அணி தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவி உள்ளது.