விளையாட்டு

ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தேர்வு: இங்கிலாந்து அணி அறிவிப்பு

செய்திப்பிரிவு

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான 13 வீரர்கள் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடந்த ஆஷஸ் தொடரில் பந்து வீச்சு, பேட்டிங் இரண்டிலும் கலக்கிய ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிராக டெஸ்ட் தொடரை இழந்த இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் மட்டுமே இப்போது கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிரான தொடரில் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக இடம்பெறவில்லை. பார்படாஸில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நடைபெற்ற போட்டி ஒன்றில் முதல் பந்தில் அவுட் ஆகி 'கோல்டன் டக்' ஆனதால் ஆத்திரமடைந்த பென் ஸ்டோக்ஸ் ஓய்வறை லாக்கரைக் கையினால் குத்தி மணிக்கட்டில் காயம் அடைந்தார்.

இதனால் வங்கதேசத்தில் நடைபெற்ற ஐசிசி 20 ஓவர் உலகக் கோப்பைப் போட்டிகளில் அவர் விளையாட முடியாமல் போனது.

இவர் ஆஷஸ் தொடரில் தனது திறமையை நிரூபித்தவர். பெர்த் டெஸ்டில் தனது முதல் டெஸ்ட் சதத்தை எடுத்த ஸ்டோக்ஸ் பிறகு சிட்னி டெஸ்டில் தனது பவுலிங் திறமையை நிரூபித்து 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இப்போது பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணியின் புதிய ஆல்ரவுண்டர் கிறிஸ் ஜோர்டானுடன் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள மற்றொரு வீரர் கிறிஸ் வோக்ஸ்.

இங்கிலாந்து டெஸ்ட் அணி:

அலிஸ்டர் குக், சாம் ராப்சன், கேரி பாலன்ஸ், இயன் பெல், ஜோ ரூட், மொயீன் அலி, மேட் பிரையர், கிறிஸ் ஜோர்டான், ஸ்டூவர்ட் பிராட், லியாம் பிளன்கெட், ஜேம்ஸ் ஆண்டர்சன், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ்

SCROLL FOR NEXT