ஜெர்மனி அணி உலகக் கோப்பைக் கால்பந்தில் சாம்பியன் ஆவதற்காக விஸ்கி பாட்டில் ஒன்றை 20 ஆண்டுகளாக தன் தோட்டத்தில் புதைத்து வைத்துக் காத்திருக்கிறார் இந்திய கால்பந்து ரசிகர் ஒருவர்.
புதுல் போரா என்ற அந்த 53 வயது அசாம் மாநில வர்த்தகர் 1994ஆம் ஆண்டு உலகக் கோப்பையை ஜெர்மனி வெல்லும் என்ற நம்பிக்கையில் உயர்தர ஸ்காட்ச் விஸ்கியை வாங்கினார். ஆனால் காலிறுதியில் பல்கேரியாவிடம் ஜெர்மனி 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வி தழுவ வேதனையடைந்த போரா அந்த பாட்டிலை தன் தோட்டத்தில் புதைத்து வைத்தார்.
.“இந்த முறை ஜெர்மனி அணி ஆடும் ஆட்டம் 20 ஆண்டுகளுக்கு முன்பாக புதைத்த விஸ்கி பாட்டிலை தோண்டி எடுக்க வைத்துள்ளது, ஆனால் எனது நண்பர்கள் அந்த விஸ்கி பாட்டிலை ஏலம் விடுமாறு கூறி வருகின்றனர்” என்று அவர் செய்தி நிறுவனம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
2002ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு ஜெர்மனி தகுதி பெற்றது. ஆனால் அந்த முறை பிரேசிலிடம் தோற்றது ஜெர்மனி. ஜெர்மனியின் இந்தத் தோல்விக்குப் பிறகு தான் குடிப்பதையே நிறுத்தி விட்டதாக அவர் கூறியுள்ளார்.
இந்த முறை ஜெர்மனி கோப்பையை வெல்லும் என்று கூறும் அவரது வீடு கால்பந்து வீரர்களின் போஸ்டர்களுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் கால்பந்து ரசிகர்கள் அவரது வீட்டில் நடப்பு உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிகளை ரசித்து வருகின்றனர்.