ரோட்டர்டாம்: ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட நேஷன்ஸ் லீக் தொடரின் இறுதி ஆட்டத்தில் நேற்று நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நகரில் ஸ்பெயின் - குரோஷியா அணிகள் மோதின. இதில் நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்கள் முடிவில் இரு அணிகள் தரப்பிலும் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இந்த 30 நிமிடங்களிலும் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை.
இதனால் பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் ஸ்பெயின் அணி 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. முதல் 4 வாய்ப்பில் ஸ்பெயின் வீரர்கள் ஜோஸ்லு, ரோட்ரி, மெரினோ, அசென்சியோ கோல் அடித்து அசத்தினார். அதேவேளையில் குரோஷியா அணியில் விளாசிக், புரோஸோவிக், லூகா மோட்ரிக் கோல் அடித்தனர். லோவ்ரோ மேஜர் இலக்கை நோக்கி உதைத்த பந்தை ஸ்பெயின் கோல்கீப்பர் உனை சைமன் அற்புதமாக பாய்ந்தவாறு காலால் தட்டிவிட்டார்.
ஸ்பெயின் அணியின் 5-வது வாய்ப்பை லபோர்ட்டே வீணடித்தார். அவர், உதைத்த பந்து கோல் கம்பத்தில் பட்டு திரும்பியது. மாறாக குரோஷியா அணியின் 5-வது வாய்ப்பில் பெர்சிக் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 4-4 சமநிலையில் இருந்தது. கடைசி வாய்ப்பில் குரோஷியாவின் பெட் கோவிக் உதைத்த பந்தை உனை சைமன் பாய்ந்தபடி கைகளால் தட்டிவிட்டார். இதனால் குரோஷியா ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். மறுபுறம் ஸ்பெயின் அணியின் கார்வஜல் கடைசி வாய்ப்பில் பந்தை கோல் வலைக்குள் திணிக்க சக அணி வீரர்கள் உற்சாகத்தில் திளைத்தனர். சர்வதேச கால்பந்து அரங்கில் போட்டியில் ஸ்பெயின் அணி 11 வருடங்களுக்கு பிறகு தற்போது தான் கோப்பை வென்றுள்ளது.
கடைசியாக அந்த அணி 2012-ம் ஆண்டு நடைபெற்ற ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் கோப்பையை வென்றிருந்தது.