ஜகார்த்தா: இந்தோனேஷிய ஓபன் பாட்மிண்டனில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது.
1000 புள்ளிகள் கொண்ட இந்தோனேஷிய ஓபன் பாட்மிண்டன் தொடர் ஜகார்த்தா நகரில் நடைபெற்றது. இதன் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் நேற்று உலகத் தரவரிசையில் 6-வது இடமும், பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டில் தங்கப் பதக்கமும், கடந்த ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கமும் வென்ற இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடியானது உலக சாம்பியனான மலேசியாவின் ஆரோன் சியா, சோ வூய் யிகா ஜோடியை எதிர்த்து விளையாடியது.
43 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 21-17, 21-18 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஆகியோர் ஆயிரம் புள்ளிகள் கொண்ட சூப்பர் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய ஜோடி என்ற வரலாற்று சாதனையை படைத்தனர்
ஆடவர் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீரரான டென்மார்க்கின் விக்டர் ஆக்செல்சன் 21-14, 21-13 என்ற கணக்கில் 2-ம் நிலை வீரரான இந்தோனேஷியாவின் அந்தோனி சினிசுகா ஜின்டிங்கை வீழ்த்தி கோப்பையை வென்றார். மகளிர் ஒற்றையர் பிரிவிவில் 4-ம் நிலை வீராங்கனையான சீனாவின் சென் யு 21-18, 21-19 என்ற நேர் செட்டில் 6-ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் கரோலின் மரினை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். மகளிர் இரட்டையர் பிரிவில் கொரியாவின் பேக் ஹா நா, லீ சோ ஹீ ஜோடி 22-20, 21-10 என்ற செட் கணக்கில் ஜப்பானின் யூகி ஃபுகுஷிமா, சயகா ஹிரோடா ஜோடியை வீழ்த்தி பட்டம் வென்றது.