ஹராரே: ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான தகுதி சுற்று தொடரில் ஜிம்பாப்வே தனது முதல் ஆட்டத்தில் நேபாளம் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஹராரேவில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நேபாளம் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 290 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரரான குஷால் புர்டெல் 95 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் 99 ரன்கள் விளாசினார். மற்றொரு தொடக்க வீரரான ஆசிப் ஷேக் 100 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் சேர்த்தார். ஜிம்பாப்வே அணி தரப்பில் ரிச்சர்ட் நகரவா 4, வெலிங்டன் மசகட்ஸா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
291 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஜிம்பாப்வே அணியானது 44.1 ஓவரில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. கேப்டன் கிரெய்க் எர்வின் 128 பந்துகளில், ஒரு சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 121 ரன்களும், சீன் வில்லியம்ஸ் 70 பந்துகளில், 13 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 102 ரன்களும் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர். முன்னதாக ஜாய்லார்ட் கும்பி 25, வெஸ்லி மாதேவேரே 32 ரன்களில் ஆட்டமிழந்தனர்.