புதுடெல்லி: இந்திய மல்யுத்த சம்மேனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது 7 மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் புகார் கூறினர். இந்த புகார் தொடர்பாக பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே அவரை கைது செய்யக்கோரி கடந்த சில மாதங்களாகவே மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்டோர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். கடந்த 7-ம் தேதிமத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து வீராங்கனைகளின் போராட்டம் தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் சாக்ஷி மாலிக்கும் அவரது கணவரும் மல்யுத்த வீரருமான சத்யவர்தன் கதியன் ஆகியோர் கூட்டாக ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அதில், “மல்யுத்த வீராங்கனைகள் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு ஆரம்பத்தில் கடிதம் எழுதியதே பாஜகவைச் சேர்ந்தவர்களான பபிதா போகத் (முன்னாள் மல்யுத்த வீராங்கனை, பாஜக எம்.பி) மற்றும் தீரத் ராணா ஆகியோர்தான் எனக் குறிப்பிட்டனர். மேலும் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அவர்களால் எழுதப்பட்ட கடிதத்தையும் காண்பிப்பதும் இடம் பெற்றிருந்தது”.
இந்த பதிவு, மல்யுத்த வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
11 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் இருவரும், “எங்கள் போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது அல்ல என்பதை தெளிவுபடுத்துகிறேன். நாங்கள் ஜனவரி மாதம் ஜந்தர் மந்தருக்கு வந்தோம். நாங்கள் போராட்டம் நடத்துவதற்கு இரண்டு பாஜக தலைவர்கள் (பபிதா போகத், தீரத் ராணா) காவல் துறையினரிடம் அனுமதி பெற்று தந்தனர்.
எங்கள் போராட்டத்தை காங்கிரஸ் ஆதரிக்கவில்லை. கடந்த 10 முதல் 12 ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தல் மற்றும் மிரட்டல் நடந்து வருகிறது என்பதை மல்யுத்த விளையாட்டில் உள்ள 90 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் அறிந்திருக்கிறார்கள். ஒரு சிலர் தங்கள் குரலை உயர்த்த விரும்பினர். ஆனால் மற்றவர்கள் ஒன்றுபடவில்லை. வீரர், வீராங்கனைகள் இடையே ஒற்றுமை இல்லாததால் பல ஆண்டுகளாக அமைதியாக இருந்தோம்” எனத் தெரிவித்துள்ளனர்.
சாக்ஷி மாலிக், சத்யவர்தன் கதியன் ஆகியோரின் இந்த பதிவுக்கு பபிதா போகத் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக பபிதா போகத் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
என் தங்கை மற்றும் அவள் கணவரின் வீடியோவைப் பார்த்து நான் மிகவும் வருத்தப்பட்டேன், சிரிக்கவும் செய்தேன். சாக்ஷி மாலிக் காட்டும் அனுமதிப்பத்திரத்தில் எனது கையெழுத்தோ அல்லது எனது பெயரோ எங்கும் இல்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
பிரதமர் மீதும், நீதித்துறை மீதும் நம்பிக்கை வையுங்கள் என முதல் நாளில் இருந்தே நான் கூறி வருகிறேன். உண்மை நிச்சயம் வெளிவரும். ஒரு வீராங்கனையாக, நாட்டின் அனைத்து வீரர்களுடன் நான் எப்போதும் இருந்தேன், இப்போதும் உடன் இருக்கிறேன். எப்பொழுதும் உடன் இருப்பேன், ஆனால் போராட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே நான் இந்த விஷயத்திற்கு ஆதரவாக இல்லை. பிரதமரையோ அல்லது உள்துறை அமைச்சரையோ சந்தியுங்கள், அவர்கள் தீர்வு காண்பார்கள் என்று பலமுறை மல்யுத்த வீரர்களிடம் கூறியுள்ளேன். ஆனால் அதற்கு பதிலாக, காங்கிரஸ் தலைவர்களான பிரியங்கா காந்தி, தீபேந்தர் ஹூடா மற்றும் பிறரிடம் உதவி கேட்டனர்.
உங்களின் நோக்கங்கள் குறித்து நாட்டு மக்கள் இப்போது தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளனர். புதிய பாராளுமன்ற கட்டிட திறப்புவிழாவின் போது நீங்கள் நடத்திய பேரணியும், கங்கையில் பதக்கங்களை மூழ்கடித்து விடுவோம் என்ற மிரட்டலும் நாட்டையே தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. நீங்கள் காங்கிரஸின் கைப்பொம்மையாக மாறிவிட்டீர்கள் என்பதை நாட்டு மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். இப்போது நீங்கள் உண்மையான நோக்கத்தைச் சொல்வதற்கான நேரம் வந்துவிட்டது.
இவ்வாறு பபிதா போகத் தெரிவித்துள்ளார்.