விளையாட்டு

விம்பிள்டனில் ஆடுவதும் வெல்வதும் உறுதி

செய்திப்பிரிவு

இப்போது தோற்றுவிட்டதற்காக விம்பிள்டனில் விளையாடுவதை நிறுத்திக் கொள்ளமாட்டேன். விம்பிள்டனில் மீண்டும் பட்டம் வெல்வேன் என்ற நம்பிக்கையுள்ளது என உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால் தெரிவித்துள்ளார்.

14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான நடால், விம்பிள்டன் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 19 வயது இளம் வீரரான ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார். 2008 மற்றும் 2010-ம் ஆண்டுகளில் விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வென்ற நடால் 2011-ல் இறுதிச்சுற்றில் தோல்வி கண்டார். அதன்பிறகு 2012-ல் 2-வது சுற்றோடும், கடந்த ஆண்டில் முதல் சுற்றோடும் வெளியேறிய நடால், இந்த முறை 4-வது சுற்றோடு வெளியேறியிருக்கிறார்.

பிரெஞ்சு ஓபனில் 9 முறை சாம்பியன் பட்டம் வென்று முடிசூடா மன்னனாகத் திகழும் நடால், புல் தரைகளில் நடைபெறும் விம்பிள்டன் போன்ற போட்டிகளில் தொடர்ந்து தடுமாறி வருகிறார். இந்த நிலையில் அவர் கூறியிருப்பதாவது:

எனது உடல் ஒத்துழைக்கின்ற போதெல்லாம் என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக ஆட முயற்சிக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக முழங்கால் காயம் காரணமாக சிறப்பாக ஆட முடியவில்லை. ஆனால் இந்த ஆண்டு முழங்காலில் எந்த பிரச்சினையும் இல்லை என்பதுபோல் உணர்ந்தேன். அதனால் களமிறங்கினேன். இந்த ஆட்டத்தில் தோற்றாலும் சிறப்பாக விளையாடியதாகவே நினைக்கிறேன். ஆனால் எதிராளியை வீழ்த்தும் அளவுக்கு போதுமான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதேநேரத்தில் கிர்ஜியோஸ் என்னைவிட சிறப்பாக ஆடினார்.

கடந்த 3 ஆண்டுகளாக சர்வதேச தரவரிசையில் 100 இடங்களுக்கு மேல் இருக்கும் வீரர்களிடம் தோல்வி கண்டது குறித்துப் பேசிய நடால், “பிரச்சினை எப்போதுமே ஒரே மாதிரியானதுதான். 2010-ல் விம்பிள்டனில் பட்டம் வென்றபோது 2 மற்றும் 3-வது சுற்றுகளில் முதல் இரு செட்களை இழந்தேன். ஆனாலும் அந்த போட்டியில் வெல்ல முடிந்தது. ஆனால் கிர்ஜியோஸுக்கு எதிரான ஆட்டத்தில் அதுபோன்று நடக்கவில்லை. பொதுவாகவே புல் தரையில் விளையாடுகிறபோது முதல் வாரத்தில் மைதானத்தை கணிக்க முடியாது” என்றார்.

SCROLL FOR NEXT