புவனேஷ்வர்: இன்டர்காண்டினென்டல் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு புவனேஷ்வரில் இந்தியா-லெபனான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்தியா, மங்கோலியா, லெபனான், வனுவாட்டு ஆகிய 4 அணிகள் கலந்துகொண்டுள்ள இன்டர்காண்டினென்டல் கோப்பைக்கான கால்பந்து தொடர் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றின் முடிவில் இந்தியா, லெபனான் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதி ஆட்டத்தில் இன்று இரவு 7.30மணிக்கு இந்தியா-லெபனான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. லீக் சுற்றில் இரு அணிகளும் மோதிய ஆட்டம் கோல்களின்றி டிராவில் முடிவடைந்திருந்தது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 4 முறை கோல் அடிக்க கிடைத்த வாய்ப்புகளை தவறவிட்டிருந்தது. இறுதிப் போட்டி என்பதால் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் தீவிரமாக செயல்படக்கூடும்.