தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்துக் கழகம் மற்றும் சென்னை அரைஸ் அறக்கட்டளை சார்பில், ஸ்டெர்லைட் கோப்பைக்கான, அகில இந்திய கல்லூரிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி தூத்துக்குடியில் கடந்த 26-ம் தேதி தொடங்கின. இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் 7 அணிகளும், பெண்கள் பிரிவில் 5 அணிகளும் மோதின. லீக் முறையில் நடைபெற்ற போட்டியின் இறுதிச் சுற்று ஆட்டங்கள் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்றன.
ஆண்கள் பிரிவில், சென்னை கிறிஸ்தவ கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது. சென்னை டி.ஜி. வைஷ்ணவ் கல்லூரி அணி 2-ம் இடத்தையும், பெங்களூரு ஜெயின் பல்கலைக்கழக அணி மூன்றாம் இடத்தையும் பிடித்தன.
பெண்கள் பிரிவில், சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவ் கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது. கேரளா அசம்சன் கல்லூரி அணி 2-ம் இடத்தையும், சென்னை இந்துஸ்தான் பல்கலைக்கழக அணி 3-ம் இடத்தையும் பிடித்தன.
வெற்றிபெற்ற அணிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.மகேந்திரன் பரிசு வழங்கினார். தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மேலாண்மை இயக்குநர் கே.வி.ராமமூர்த்தி, ஸ்டெர்லைட் காப்பர் நிறுவன தலைமை நிர்வாகி அனுப் டியோ, தமிழ்நாடு கூடைப்பந்து கழகத் தலைவர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன், பொதுச்செயலாளர் ஆதவா அர்ஜூனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.