ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 போட்டியில் விளையாட தேர்வாகியுள்ள இந்திய வேகபந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா தன் மீது கூறப்படும் விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ளார்.
அக்டோபர் 7-ம் தேதி தொடங்கும் ஆஸி.க்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியில் ஆஷிஷ் நெஹ்ரா, தினேஷ் கார்த்திக், ஷிகர் தவன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் 38 வயதாகும் நெஹ்ராவால் தனது வயது குறித்து வரும் விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் அவர் கூறும்போது, "இந்தியாவுக்கு விளையாடுவதில் யாருக்குதான் மகிழ்ச்சி இருக்காது. நான் என் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து கவலைப்படுவதில்லை. எனது பங்களிப்பு பற்றி இந்திய அணி தேர்வாளர்களுக்கும், இந்திய அணியினருக்கும், இந்திய கேப்டனுக்கும் தெரியும். நான் இந்திய அணியில் இடப்பெற்றப்போதெல்லாம் ஏதாவது பங்களிப்பை செய்திருக்கிறேன்.
நான் நன்றாக விளையாடினால் அது செய்தி, அதுவே நான் மோசமாக விளையாடினால் அது மிகப் பெரிய செய்தி.
சமீப காலமாகத்தான் நான் ஸ்மார்போன்களை உபயோகப்படுத்த ஆரம்பித்திருக்கிறேன். நான் ட்விட்டர், ஃபேஸ்புக் உபயோகத்திலிருந்து தொலைவில் இருக்கிறேன். நான் எனது பயிற்சி மற்றும் தொடர் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டதால்தான் நான் அணிக்கு திரும்பியுள்ளேன்.
வரும் பிப்ரவரி 2018 முதல் நான் சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்து 19 வருடங்கள் ஆக உள்ளது. நான் பணத்திற்காக விளையாடியது கிடையாது. எனது கிரிக்கெட் வாழ்க்கையில் 12 அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன. இப்போதுகூட காலையில் எழுந்தவுடன் எனது பயிற்சிக்கு புறப்பட்டுவிடுவேன். அதுதான் உத்வேகம்” என்றார்.
ஆஷிஷ் நெஹ்ரா கடைசியாக பிப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிராக டி20யில் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.