நம்பர் 1 டெஸ்ட் பவுலராக ஐசிசி பட்டியலில் இடம்பெற்றிருந்தும் இந்திய அணியினரால் ஏதோ நேற்றுதான் ஆடவந்த சின்னப்பிள்ளை போல நடத்தப்பட்ட அஸ்வின், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தன்னை உட்கார வைத்தது, தனக்கு ஓர் இடர்பாட்டுத் தடை மட்டும்தானே தவிர தனக்கான‘பின்னடைவு’ அல்ல என்று கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டிகளில் பகிர்ந்தவை: “என்னைப் பொறுத்தவரை இது எனக்குப் பின்னடைவு அல்ல. இது ஓர் இடர்பாட்டுத் தடை மட்டுமே. நான் இதைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு போய்க்கொண்டே இருப்பேன். ஏனெனில், இது என்ன முதல் முறையாகவா நடந்துவிட்டது? யாராவது ஒருவர் உங்களை முதல்முறையாக அடித்து வீழ்த்தினால், நீங்கள் இதற்கு உடனடியாக எதிர்வினையாற்றுவீர்கள். ஆனால், எனக்கு இது முதல் முறையல்ல.
நம் வாழ்க்கையில் எப்போதாவது அடித்து வீழ்த்தப்பட்டால் நாம் அதற்குப் பழகி, எப்படி மேலெழுவது என்பதை தெரிந்துகொள்வோம். இதுதான் வாழ்க்கை. நாம் நம் உச்சத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இது பின்னடைவுதான். இதுபோன்ற நிலைமைகளை எப்படி எதிர்கொண்டு மீள்வது என்பதுதான் முக்கியம்.
நான் இறுதிப் போட்டியில் விளையாடுவதை விரும்பினேன். ஏனெனில், இந்த இறுதிப் போட்டி வரை வந்ததற்கு என் பங்களிப்பும் இருந்துள்ளது. இதற்கு முந்தைய ஃபைனலில் கூட நான் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினேன். நன்றாகவே பந்து வீசினேன். 2018-19 முதல் வெளிநாடுகளில் எனது பந்துவீச்சு அற்புதமாக இருந்தது. அத்துடன், அணிக்காக நான் வெற்றிபெற முடிந்தது. நான் ஒரு கேப்டனாக அல்லது பயிற்சியாளராக இதைப் பார்க்கிறேன். நான் அவர்களைப் பாதுகாக்க விரும்பி பின்னோக்கிய பார்வையில் பேசுகிறேன்.
ஒரு ஸ்பின்னர் விளையாடுவதற்கான பிரச்சினை 4-வது இன்னிங்ஸ் என்பதே. நான்காவது இன்னிங்ஸ் மிகவும் முக்கியமான அம்சமாகும். மேலும் சுழற்பந்து வீச்சாளர் விளையாடுவதற்கு அந்த அளவு ரன்களை எடுக்க வேண்டும். அப்போதுதான் ஸ்பின்னரின் தேவை அதிகரிக்கின்றது. இது முற்றிலும் ஒரு மனநிலை சார்ந்த விஷயம். அதை விடுத்து நான் எனக்குள்ளேயே யோசித்துக் கொண்டு ‘யாரோ என்னை மதிப்பிடுகிறார்கள், என் மீது தீர்ப்பளிக்கிறார்கள்’ என்று நினைப்பது முட்டாள்தனம். மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன கருதுகின்றனர் என்பதைப் பார்க்கும் நிலையில் என் கிரிக்கெட்டின் அனுபவ நிலை இல்லை. என் திறமை என்னவென்று எனக்குத் தெரியும். நான் ஒன்றில் சரியாக இல்லை என்றால், என்னை நானே விமர்சித்துக் கொள்வதில் தயங்க மாட்டேன்.
நான் என் சாதனைகளில், புகழ்களில் மயங்கிக் கிடப்பவன் அல்ல. நான் அப்படி வளர்க்கப்படவில்லை. ஆகவே, என்னைப் பற்றி முடிவெடுப்பவர்கள் யார் என்பது என்னைப் பொறுத்தவரை ஒரு விஷயமே இல்லை. நான் வழக்கமாக இருப்பதை விட கூலாகவே இருக்கிறேன். நான் முன்னெப்போதையும் விட இப்போது கூடுதல் ரிலாக்ஸாகவே இருக்கின்றேன். இவையெல்லாம் என்னை மனதளவில் மிகவும் பாதிக்குமாறு வைத்துக் கொண்டால் அதன் விளைவுகளை அறிந்திருக்கின்றேன். ஆனால், அவற்றையெல்லாம் கடந்து வந்து விட்டேன். புதிய ‘என்னை’ கண்டுப்பிடித்துக் கொண்டேன்.
நான் அளவுக்கதிகமாக சிந்திப்பவன் என்று பலரும் என்னைப்பற்றி பேசியும் கருதியும் வருகின்றனர். 15-20 போட்டிகளை தொடர்ச்சியாக சர்வசாதாரணமாக ஆடுபவன் ஏன் அதிகமாக யோசிப்பவனாக இருக்க வேண்டும். 2 போட்டிகளில்தான் நமக்கு வாய்ப்பு என்று இருக்கும் வீரர்கள்தான் இது போன்ற விஷயங்களால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இவர்கள்தான் அதிகம் இதைப்பற்றி யோசிப்பவர்களாக இருப்பார்கள். நான் அல்ல” என்று அஸ்வின் கூறியுள்ளார்.