கொல்கத்தா: வரும் 28-ம் தேதி நடப்பு ஆண்டுக்கான துலீப் டிராபி தொடர் தொடங்க உள்ளது. இந்நிலையில், இந்த தொடரில் தான் பங்கேற்கப் போவதில்லை என விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான விருத்திமான் சாஹா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவலை திரிபுரா அணியின் தேர்வாளர் ஜெயந்தா தெரிவித்துள்ளார்.
“நான் சாஹாவை தொடர்பு கொண்டேன். அவர் துலீப் டிராபியில் விளையாட மறுத்துவிட்டார். உள்நாட்டில் நடைபெறும் இந்த முதல் தர கிரிக்கெட் தொடர் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை வீரர்களுக்கு ஏற்படுத்தி தருகிறது. ஆனால், நான் ஒருபோதும் இந்திய அணிக்காக இனி விளையாடப் போவதில்லை. அதனால் எனது இடத்தில் இளம் வீரர் விளையாடட்டும் என சொல்லிவிட்டார்” என ஜெயந்தா தெரிவித்துள்ளார்.
சாஹாவின் இந்த மனம் அவர் மீதான மரியாதையை பன்மடங்கு அதிகரிக்கவே செய்கிறது. டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் தோனியின் ஓய்வுக்குப் பிறகு பிரதான விக்கெட் கீப்பராக இந்திய அணியில் சாஹா விளையாடி வந்தார். இளம் வீரர் ரிஷப் பந்த் அணிக்குள் வந்ததும் சாஹா விளையாடும் போட்டிகளின் எண்ணிக்கை குறைந்தது. கடைசியாக கடந்த 2021 டிசம்பரில் அவர் இந்திய அணிக்காக விளையாடி இருந்தார். அதன் பிறகு அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார் 38 வாய்தானா சாஹா. அதன் மூலம் 1,353 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 3 சதங்கள் மற்றும் 6 அரை சதங்கள் அடங்கும். 92 கேட்ச்கள் மற்றும் 12 ஸ்டம்பிங் செய்துள்ளார். 9 சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி உள்ளார். 122 ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டிகள் மற்றும் 102 லிஸ்ட் ஏ போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார்.