டாக்கா: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி முதல் நாள் ஆட்டத்தில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 362 ரன்கள் குவித்தது. நஜ்முல் ஹோசைன் ஷான்டோ 146 ரன்கள் விளாசினார்.
டாக்காவில் உள்ள ஷெர்-இ-பங்களா தேசிய மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த வங்கதேச அணிக்கு தொடக்கம் சற்று அதிர்ச்சியாக இருந்தது. தொடக்க வீரரான ஜாகீர் ஹசன் 1 ரன்னில் அறிமுகவீரரான நிஜாத் மசூத் பந்தில்ஆட்டமிழந்தார். இதன் பின்னர்களமிறங்கிய நஜ்முல் ஹோசைன் ஷான்டோ அதிரடியாக விளையாடினார்.
மட்டையை சுழற்றிய நஜ்முல் ஹோசைன் ஷான்டோ 118 பந்துகளில், 18 பவுண்டரிகளுடன் தனது 3-வது சதத்தை விளாசினார். அதேவேளையில் மறுமுனையில் நிதானமாக பேட் செய்த தொடக்க வீரரான மஹ்முதுல் ஹசன் ஜாய் 102 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் தனது3-வது அரை சதத்தை கடந்தார். 2-வது விக்கெட்டுக்கு 212 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில் இந்த ஜோடியை சுழற்பந்து வீச்சாளர் ரஹ்மத் ஷா பிரித்தார்.
மஹ்முதுல் ஹசன் ஜாய் 137 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் எடுத்த நிலையில் ரஹ்மத் ஷா பந்தில் சிலிப் திசையில் நின்ற இப்ராகிம் ஸத்ரனிடம் பிடிகொடுத்து வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய மோமினுல் ஹக் 15 ரன்களில் நிஜாத் மசூத் பந்தில் நடையைகட்டினார். சிறப்பாக விளையாடிவந்த நஜ்முல் ஹோசைன் ஷான்டோ 175 பந்தில், 23 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 146 ரன்கள் எடுத்த நிலையில் அமிர் ஹம்சா பந்தில் ஆட்டமிழந்தார்.
இதன் பின்னர் களமிறங்கிய கேப்டன் லிட்டன் தாஸ் 9 ரன்னில்ஸாகீர் கான் பந்தில் வெளியேறினார். முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் வங்கதேச அணி 79 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 362 ரன்கள் குவித்தது. முஸ்பிகுர் ரஹிம் 41, மெஹிதி ஹசன் மிராஸ் 43 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கைவசம் 5 விக்கெட்கள் இருக்கஇன்று 2-வது நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது வங்கதேச அணி.