கோவை: நடப்பு டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் ஒரே டெலிவரியில் 18 ரன்கள் வழங்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் விளையாடிய போட்டியில் இது அரங்கேறி உள்ளது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் கடைசி ஓவரை சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிக்காக அபிஷேக் தன்வார் வீசி இருந்தார். அவர் அந்த ஓவரின் கடைசி பந்தில் தான் 18 ரன்கள் கொடுத்துள்ளார். இவர் கடந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர். இருந்தும் நடப்பு சீசனில் தொடக்கம் அவருக்கு சிறப்பானதாக அமையவில்லை.
அந்த பந்தில் வரிசையாக 3 நோ-பால் வீசி இருந்தார். தொடர்ந்து ஒரு ஒய்டு வீசி இருந்தார். இறுதியாக ஐந்தாவது முயற்சியில் தான் பந்தை முறையாக அவர் வீசி இருந்தார். அந்த ஒரு டெலிவரியில் மட்டுமே 1+7(சிக்ஸர்)+3+1+6 என 18 ரன்களை அவர் கொடுத்திருந்தார். மொத்தமாக அந்த ஓவரில் 26 ரன்களை அவர் லீக் செய்திருந்தார். இதில் 4 நோ-பால் மற்றும் 1 ஒய்டு அடங்கும்.
20 ஓவர்களில் சேப்பாக் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்தது. அந்த இலக்கை விரட்டிய சேலம் அணியால் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 52 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் அணி வெற்றி பெற்றது.