புதுடெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது 7 மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் புகார் கூறினர்.
இதுதொடர்பாக டெல்லிகாவல்துறையினர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது 2 எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். எனினும் அவர், இதுவரை கைது செய்யப்படவில்லை. இதை கண்டித்து ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற வினேஷ் போகத், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் பூனியா உள்ளிட்டோர் போராட்டம் நடத்தி வந்தனர்.
கடந்த 7ம் தேதி போராட்டம் நடத்தியவர்களை நேரில் அழைத்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று வரும் 15ம் தேதி வரை போராட்டத்தை மல்யுத்த வீரர்கள் ஒத்திவைத்தனர். அன்றைய தேதியில் பாலியல் புகார் விவகாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என அனுராக் தாக்குர் வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில் வீராங்கனைகள் போராட்டத்தை தற்காலிகமாக தள்ளிவைத்தனர்.
இந்நிலையில் ஹரியாணா மாநிலம் சோனிப்பட்டில் நேற்று மகா பஞ்சாயத்து நடைபெற்றது. இதில் சாக்ஷி மாலிக், பஜ்ரங் பூனியா உள்ளிட்டோர் கலந்து கொண்டு அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் குறித்து எடுத்துக்கூறினர்.
இதைத் தொடர்ந்து சாக்ஷி மாலிக் கூறும்போது, “பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்தால்தான் நாங்கள் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்போம். இது எவ்வளவு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியாது.
நான் ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். நான், பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் ஆகியோர் ஒன்றாகவே இணைந்து நிற்கிறோம். ஒன்றாகவே இணைந்து நிற்போம். ஜூன்15-ம் தேதிக்கு பிறகு போராட்டத்தை எங்கிருந்து தொடங்குவது என்பது குறித்து முடிவு செய்வோம்” என்றார்.
இதற்கிடையே கடந்த வெள்ளிக்கிழமை புகார் கூறிய மல்யுத்த வீராங்கனைகளில் ஒருவரை போலீஸார், மல்யுத்த சம்மேளன அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இந்த அலுவலகம் பிரிஜ் பூஷண் சரண் சிங் வீட்டின் ஒரு பகுதியிலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் அரை மணி நேர விசாரணைக்குப் பின்னர் அந்த வீராங்கனையை காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையே மல்யுத்த வீராங்கனைகள் சமாதானம் பேசுவதற்காக, பிரிஜ் பூஷண் சரண் சிங் வீட்டிற்கு சென்றதாக தகவல்கள் வெளியாயின. ஆனால் இதை போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வரும் வினேஷ் போகத் மறுத்துள்ளார்.