சார்ஜா: ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்தத் தொடரின் 3-வது ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார் மேற்கிந்திய தீவுகள் அணியின் சுழற்பந்து வீச்சாளர் கெவின் சின்க்ளேர் (Kevin Sinclair).
மூன்றாவது போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்றதும் அவர்தான். இந்தப் போட்டியின்போது அவர் எதிரணி வீரர்களின் விக்கெட்டை கைப்பற்றியபோது அப்படியே காற்றோடு காற்றாக கலந்து சம்மர்சால்ட் அடித்து அதனைக் கொண்டாடினார். அவரது அந்தக் கொண்டாட்டம் வைரலாகி பரவலான சமூக வலைதள பயனர்களின் பார்வையை பெற்றுள்ளது.
“மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாட வேண்டும் என்பது எனது கனவு. இங்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் நான்கு விக்கெட்டுகளை நான் கைப்பற்றியதில் மகிழ்ச்சி. இதை நான் என்றும் மறக்க முடியாது. ஆட்டத்தில் நான் செயல்பட்ட விதம் எனக்கு மனநிறைவைத் தருகிறது. சரியான இடத்தில் பந்துவீச வேண்டும் என்பது மட்டுமே இலக்காக இருந்தது. அண்மையில் எனது தாத்தா அவரது 75-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு இதை அன்புப் பரிசாக சமர்ப்பிக்கிறேன்” என கெவின் சின்க்ளேர் தெரிவித்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணி, அடுத்ததாக வரும் 18-ம் தேதி அமெரிக்க அணிக்கு எதிராக ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தகுதி சுற்றில் விளையாடுகிறது. 10 அணிகள் பங்கேற்று விளையாடும் இந்தத் தொடரில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இந்தியாவில் வரும் அக்டோபர் மற்றும் நவம்பரில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் விளையாடும்.