ஷர்துல் தாக்குர் 
விளையாட்டு

WTC Final | ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் போதும்; 450 ரன்களையும் விரட்டலாம் - ஷர்துல் தாக்குர்

செய்திப்பிரிவு

லண்டன்: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 296 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்தப் போட்டியின் நான்காவது மற்றும் ஐந்தாவது நாள் ஆட்டம் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது.

இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்துள்ளது. 360 அல்லது 370 ரன்கள் இந்தப் போட்டியில் இலக்காக இருந்தால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சூழலில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்குர் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

“கிரிக்கெட் விளையாட்டு வேடிக்கை நிறைந்தது. ஐசிசி இறுதிப் போட்டியில் எது சரியான இலக்காக இருக்கும் என யாராலும் சொல்ல முடியாது. ஒரு சிறந்த பார்ட்னர்ஷிப் அமைந்தால் 450 அல்லது அதற்கும் மேற்பட்ட ரன்களையும் சேஸ் செய்ய முடியும். கடந்த ஆண்டு இங்கிலாந்து அணி இங்கு சுமார் 400 ரன்களை சேஸ் செய்திருந்தது. அந்தப் போட்டியில் அதிகம் விக்கெட்டுகளையும் இழக்கவில்லை. அதை எங்களுக்கு சாதகமாக பார்க்கிறோம்.

இப்போதைக்கு ஆஸ்திரேலிய அணியினர் எவ்வளவு ரன்களை சேர்ப்பார்கள் என கணிக்க முடியாது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு மணி நேரத்தில் ஆட்டம் மாறிவிடும். நாங்கள் அந்த நம்பிக்கையுடன் நான்காவது நாள் ஆட்டத்தை எதிர்நோக்கி உள்ளோம்” என ஷர்துல் தாக்குர் தெரிவித்துள்ளார்.

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஷர்துல் தாக்குர், 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அதே போல 109 பந்துகளை எதிர்கொண்டு 51 ரன்களை பதிவு செய்திருந்தார். இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் பந்து வீசிய போது ஆஸி. வீரர் ஸ்மித் கொடுத்த கேட்ச்சை பிடித்து அவரை வெளியேற்றி உள்ளார்.

SCROLL FOR NEXT