மும்பை: இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு அவர்களின் இயல்பான விளையாட்டை ஆடுவதற்கு ஊக்கம் தரப்பட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.
இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் முதல் வரிசை ஆட்டக்காரர்கள் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறியதாவது:
இங்கிலாந்தில் நடைபெறும் உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. ஆனால், ஒரு உலகக்கோப்பை போட்டியில் விளையாடுவதற்குத் தேவைப்படும் மன உறுதியும், தைரியமும் இந்திய அணியினர் வெளிப்படுத்த தவறி விட்டனர்.
நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணியினர் விளையாடச் சென்றது சற்று அதீதமானதுதான்.
ஒருவேளை இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகம், அணித்தேர்வுக்கு முன்பு முதல் நாள் சூழ்நிலையை கணக்கில் கொண்டு இதுபோன்று தேர்வு செய்திருக்கலாம். ஒரு வேகப்பந்து வீச்சாளருக்குப் பதிலாக, சுழற்பந்து வீச்சாளரைத் தேர்வு செய்திருக்கலாம்.
நம்முடைய வீரர்களின் திறனில் எந்தக் குறையும் இல்லை. ஆனால், அவர்கள் இன்னும் அதிக அளவில் பெரிய அளவிலான போட்டிகளில் அதீத பயமோ, கவலையோ இன்றி விளையாடுவதற்குப் பழக வேண்டும்.
தற்போது வீரர்கள், அதிக அழுத்தம் தருகின்ற சூழல் வரும் பொழுது ஒருவிதமான இறுக்கமான மனநிலைக்கு சென்று விடுகின்றனர். இதைத் தவிர்க்க வேண்டும்.
அவர்களால் இயல்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்த இயலவில்லை. ஆட்டத்தின் முடிவை பற்றி கவலைப்படக் கூடாது. உற்சாகமாக விளையாட வீரர்கள் பழகிக் கொள்ள வேண்டும். வீரர்களுக்கு அவர்களின் இயல்பான விளையாட்டை ஆடுவதற்கு ஊக்கம் தரப்பட வேண்டும். அணி தோல்வியடைந்தால், தாம் உடனே வெளியேற்றப்படுவோம் என்ற வகையில் மன அழுத்தம் ஏற்பட்டால் அவர்களின் தன்னம்பிக்கை தகர்ந்து விடும். இதனால் தங்களது இயல்பான ஆட்டத்தை அவர்களால் வெளிப்படுத்த முடியாது.
இவ்வாறு ஹர்பஜன் சிங் கூறினார்.