லண்டன்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடி வருகின்றன. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை இந்திய வீரர் விராட் கோலி மனதார புகழ்ந்துள்ளார்.
இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 469 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து விளையாடி வரும் இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்துள்ளது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியைக் காட்டிலும் 318 ரன்கள் இந்தியா பின்தங்கி உள்ளது.
முதல் இன்னிங்ஸில் ஸ்மித் 268 பந்துகளை எதிர்கொண்டு 121 ரன்கள் குவித்திருந்தார். ஆஸ்திரேலிய அணி சரிவை எதிர்கொண்ட வேளையில் ஹெட் உடன் வலுவான பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார். அதன் மூலம் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம் இந்தப் போட்டியில் அதிகரித்தது.
“எங்கள் தலைமுறையில் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்றால் அது ஸ்டீவ் ஸ்மித் தான். அதில் துளியும் சந்தேகம் இல்லை. ஆட்டத்தின் சூழலுக்கு ஏற்ப தகவமைப்பது, களத்தின் நிலைக்கு ஏற்ப விளையாடுவது என அவரது திறனுக்கு முன்னர் யாராலும் ஈடுகொடுக்க முடியாது.
அவர் படைத்துள்ள சாதனைகளே அது குறித்து உரக்க பேசும். சுமார் 90+ டெஸ்ட் போட்டிகளில் அவரது சராசரி 60 என இருப்பது நம்ப முடியாத ஒன்று. அவரது விக்கெட்டை கைப்பற்றுவது பெரிய சவால். அவர் அபார வீரர்” என கோலி தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்மித்: 34 வயதான ஸ்மித் கடந்த 2010 முதல் டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் விளையாடி வருகிறார். தற்போது நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்ஸ் உடன் சேர்த்து மொத்தம் 170 இன்னிங்ஸில் பேட் செய்துள்ளார். 8,913 ரன்கள் குவித்துள்ளார். 37 அரை சதங்கள், 31 சதங்கள் பதிவு செய்துள்ளார். அதிகபட்சமாக 239 ரன்கள் குவித்துள்ளார்.