லண்டன்: இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில், இந்தப் போட்டியில் இந்திய அணி வெல்ல வாய்ப்பு உள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
“இந்திய அணி எந்தவிதமான கள சூழலிலும் வெல்லும் என நான் நினைக்கிறேன். அதற்கு ஆஸ்திரேலியாவில் அவர்களது செயல்பாடு உதாரணம். சூரியன் பிரகாசிக்கும் வகையில் வானிலை ஒத்துழைத்தால் அவர்கள் 2 சுழற்பந்து வீச்சாளர்கள், 2 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் 3-வது வேகப்பந்து வீச்சாளராக ஷர்துல் தாக்கூர் என்ற ஃபார்முலாவின் அடிப்படையில் அணியை தேர்வு செய்யலாம்.
கடந்த முறை நியூஸிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி அந்த மைதானத்தின் சூழலை தவறாக கணித்து விட்டனர் என கருதுகிறேன். அதே நேரத்தில் ஓவலில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது. கடந்த முறை இங்கிலாந்தை இங்கு வீழ்த்தி உள்ளது. ஷமிக்கும், கம்மின்ஸுக்கும் இடையே நிச்சயம் பலமான போட்டி நிலவுகிறது. அது ட்யூக் பந்தில் அவர்களது லெந்த் மற்றும் லைனில் எப்படி இருக்கப் போகிறது என்பதுதான்” என நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.