சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் பூனியா 
விளையாட்டு

போராட்டத்தை கைவிடவில்லை; நீதி கிடைக்கும் வரை தொடர்வோம் - சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் பூனியா தகவல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் 7 பேர் பாலியல் அத்துமீறல் புகார் கொடுத்துள்ளனர். இதுதொடர்பாக டெல்லி காவல்துறையினர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது 2 எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். புகார் அளித்த வீராங்கனைகளில் ஒருவர் மைனர் என்பதால் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது போக்சோ சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனினும் அவர், இதுவரை கைது செய்யப்படவில்லை. பிரிஜ் பூஷண் சரண் சிங்கை விரைவில் கைது செய்யக் கோரி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று இவர்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இதை சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் பூனியா ஆகியோர் மறுத்தனர். இதுதொடர்பாக சாக்‌ஷி மாலிக் தனது ட்விட்டர் பதிவில், “நாங்கள் போராட்டத்தை கைவிடுவதாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது.

நீதிக்கான போராட்டத்தில் நாங்கள் யாரும் பின்வாங்கவில்லை, நாங்கள் பின்வாங்கவும் மாட்டோம். எங்கள் சத்தியாகிரகத்துடன், ரயில்வேயில் எனது பொறுப்பையும் நான் நிறைவேற்றுகிறேன். நீதி கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும். தயவுசெய்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.

பஜ்ரங் பூனியா தனது ட்விட்டர் பதிவில், “பேராட்டத்தை வாபஸ் பெறுகிறோம் என்ற செய்தி வெறும் வதந்தி. எங்களுக்கு தீங்கு விளைவிக்கவே இதுபோன்ற செய்திகள் பரப்பப்படுகின்றன. நாங்கள் போராட்டத்தில் இருந்து பின்வாங்கவில்லை. மல்யுத்த வீராங்கனைகள் எப்ஐஆரை வாபஸ் பெறுகிறார்கள் என்ற செய்தியும் தவறானது. நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்” எனத் தெரிவித்துள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 3 சர்வதேச வீரர்கள் கடந்த வாரம் முதல் வடக்கு ரயில்வேயில் பணிக்கு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ

SCROLL FOR NEXT