மும்பை: யு-20 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தென் கொரியாவின் யெச்சியோன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான குண்டு எறிதலில் இந்தியாவின் சித்தார்த் சவுத்ரி 19.52 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். இந்தத் தொடரில் இந்தியா கைப்பற்றியுள்ள 3-வது தங்கப் பதக்கம் இதுவாகும். தொடரின் முதல் நாளில் 400 மீட்டர் ஓட்டத்தில் ஹீனா மல்லிக், வட்டு எறிதலில் பரத்பிரீத் சிங் தங்கம் வென்றிருந்தனர்.
ஆடவருக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் ஷிவம் லோஹகரே 72.34 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். மகளிருக்கான நீளம் தாண்டுதலில் இந்தியாவின் சுஷ்மிதா 5.96 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆடவருக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸில் இந்தியாவின் ஷாருக் கான் இலக்கை 8:51.74 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஆடவருக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் ஷகீல் பந்தய தூரத்தை 1:49.79 விநாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். அதேவேளையில் 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி பந்தய தூரத்தை 3:30.12 விநாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் பெற்றது.