புதுடெல்லி: சிறப்பு ஒலிம்பிக் போட்டி ஜெர்மனி நாட்டில் வரும் 17-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 190 நாடுகளைச் சேர்ந்த 7,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். மொத்தம் 26 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்நிலையில் சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து 255 பேர் கொண்ட குழு பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 198 வீரர், வீராங்கனைகள் மற்றும் 57 பயிற்சியாளர்கள் இடம் பெற்றுள்ளனர். 16 பிரிவுகளில் நடைபெறும் போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
வரும் 12-ம் தேதி இந்திய குழு ஜெர்மனி புறப்பட்டுச் செல்கிறது. முன்னதாக டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நாளை முதல் வரும் 11-ம் தேதி வரை நடைபெறும் பயிற்சி முகாமில் வீரர்கள் கலந்துகொள்கின்றனர்.
சிறப்பு ஒலிம்பிக் என்பது அறிவுசார் குறைபாடுகள் உள்ளவர்களுக்கான உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வாகும். சிறப்பு ஒலிம்பிக்கில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கம் வெல்லும் இந்திய வீரர்களுக்கு முறையே ரூ.5 லட்சம், ரூ.3 லட்சம், ரூ.2 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் ஏற்கெனவே அறிவித்துள்ளது.