விளையாட்டு

ஆஸ்திரேலிய வீரர்களுக்கு இந்திய பவுலர்கள் அச்சுறுத்தலாக இருப்பார்கள் - மார்னஸ் லபுஷேன் கணிப்பு

செய்திப்பிரிவு

லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின்போது ஆஸ்திரேலிய வீரர்களுக்கு இந்திய பவுலர்கள் அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் மார்னஸ் லபுஷேன் தெரிவித்தார்.

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் உலக கிரிக்கெட் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி வரும் 7-ம் தேதி தொடங்கி 11-ம் தேதி நிறைவடையவுள்ளது. இந்த போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த போட்டி குறித்து ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஷேன் கூறியதாவது:

நான் அணியில் 3-வது வீரராக களமிறங்கி விளையாடி வருகிறேன். என்னால் முடிந்த அளவு அதிக ஆட்டங்களில் ரன்களை குவிப்பதற்கும் பங்களிப்பதற்கும் பல வழிகளைக் கண்டறிய வேண்டும்.

இங்கிலாந்து மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணியில் மொகமது ஷமி, மொகமது சிராஜ், உமேஷ் யாதவ் ஆகியோரை தேர்வு செய்துள்ளது. ஓவல் மைதானத்தில் இந்திய பந்து வீச்சாளர்கள், ஆஸ்திரேலிய வீரர்களுக்கு சவாலாகவும், அச்சுறுத்தலாகவும் இருப்பார்கள். நாங்கள் இந்திய அணிக்கு எதிராக பார்டர் கவாஸ்கர் கோப்பையில் விளையாடினோம். அவர்கள் எப்படி விளையாடுவார்கள் எப்படி பந்து வீசுவார்கள் என்பது குறித்த நுணுக்கங்களை கற்று வைத்துள்ளோம். இந்திய பவுலர்களை சமாளிக்கும் வியூகங்களை நாங்கள் வகுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT