லண்டன்: வரும் 7-ம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் விளையாட உள்ளன. இந்தப் போட்டி இங்கிலாந்தில் லண்டன் நகரில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த சூழலில் ஓவல் மைதானம் வேகப்பந்து வீச்சு மற்றும் சுழற்பந்து வீச்சுக்கு எந்த அளவு உதவும் என்பதை ஆஸி. வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
இரு அணி வீரர்களும் இங்கிலாந்தில் இந்தப் போட்டிக்காக தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணியும், கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலிய அணியும் இதில் விளையாடுகிறது.
“ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற உள்ள லண்டன் தி ஓவல் மைதானத்தில் சுழற்பந்து வீச்சாளர்களாலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும். மேலும், வேகப்பந்து வீச்சாளர்களால் தொடர்ந்து பவுன்சர்களை வீச முடியும். இப்போட்டியில் அஸ்வின், ஜடேஜாவை எதிர்கொள்வது சவாலாக இருக்கும்” என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.