பாரிஸ்: அர்ஜெண்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரரான லயோனல் மெஸ்ஸி பாரீஸ் செயிண்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) கிளப்பில் இருந்து விலகுகிறார். இதை அந்த கிளப்பின் பயிற்சியாளர் கிறிஸ்டோஃப் கால்டியர் உறுதி செய்துள்ளார். பிஎஸ்ஜி நாளை கிளர்மான்ட் அணியுடன் மோதுகிறது. இதுவே மெஸ்ஸி, பிஎஸ்ஜி அணிக்காக விளையாடும் கடைசி ஆட்டமாகும்.
கடந்த 2021 முதல் பிரான்ஸ் நாட்டின் பிஎஸ்ஜி கால்பந்தாட்ட கிளப் அணிக்காக மெஸ்ஸி விளையாடி வருகிறார். 2021 முதல் 2023 வரையில் இரண்டு ஆண்டு காலத்திற்கு அவரை ஒப்பந்தம் செய்துள்ளது பிஎஸ்ஜி. மேலும், விருப்பத்தின் பேரில் இந்த ஒப்பந்தத்தை மேலும் ஓராண்டு காலம் நீட்டிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதுவரை பிஎஸ்ஜி அணிக்காக 57 போட்டிகளில் விளையாடி உள்ள அவர் 22 கோல்களை பதிவு செய்துள்ளார். பிஎஸ்ஜி அணியுடனான அவரது இரண்டு ஆண்டு கால ஒப்பந்தம் வரும் தற்போதுடன் (ஜூன் மாதம்) முடிவுக்கு வருகிறது.
மறுபக்கம் அவர் மீண்டும் பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாட வாய்ப்பு உள்ளதாக கடந்த பிப்ரவரி மாதம் செய்திகள் வெளிவந்தன. இதனை ஸ்பெயின் நாட்டு ஊடகங்கள் அப்போது உறுதி செய்திருந்தன. தற்போதைய சூழலில் அடுத்து என்ன நடக்கும் என்பதை ரசிகர்கள் தீவிரமாக எதிர்பார்த்து உள்ளனர்.