ஆன்மிகம்

திருத்தல பேராலயம் ஆனது சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலயம்!

ஜெ.கு.லிஸ்பன் குமார்

சென்னை: பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயம், திருத்தல பேராலயமாக (பசிலிக்கா) உயர்த்தப்படுவதாக சென்னை பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி இன்று (செப்.21) அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இவ்விழாவில் போப்பாண்டவரின் இந்திய தூதர், பேராயர்கள், ஆயர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

கிறிஸ்தவ மக்களால் சின்ன வேளாங்கண்ணி என்று போற்றப்படும் பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயம் கடந்த 1972-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த ஆலயம் சென்னை மயிலை உயர் மறைமாவட்டத்தால் 2005-ம் ஆண்டு திருத்தலமாக அறிவிக்கப்பட்டது. இந்த ஆலயத்துக்கு கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி சமய வேறுபாடு இல்லாமல் ஏராளமான மக்கள் வந்து செல்கிறார்கள்.

இந்நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி பெசன்ட் நகர் ஆலயத்தை திருத்தல பேராலயமாக (பசிலிக்கா) தரம் உயர்த்தி போப்பாண்டவர் லியோ அறிவிப்பு வெளியிட்டார். கத்தோலிக்க திருச்சபையில் ஒரு தேவாலயத்தின் வரலாற்றுச் சிறப்பு, ஆன்மிக முக்கியத்துவம், கலைநயம் அடிப்படையில் போப்பாண்டவரால் வழங்கப்படும் மிக உயர்ந்த ஆன்மிக அந்தஸ்து இதுவாகும். இதன்மூலம் அந்த ஆலயத்துக்கு சிறப்பு அங்கீகாரமும் பல்வேறு ஆன்மிக சலுகைகளும் கிடைக்கும்.

இந்நிலையில், பசிலிக்கா அறிவிப்பு பெருவிழா கொண்டாட்டத்தையொட்டி ஆடம்பர கூட்டுத்திருப்பலி பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் இன்று மாலை நடைபெற்றது.

சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் எஸ்.ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் நடந்த இத்திருப்பலியில், பசிலிக்காவாக உயர்த்தி போப்பாண்டவர் லியோ வழங்கிய ஆணையை போப்பாண்டவரின் இந்திய தூதர் (அப்போஸ்தலிக் நுன்சியோ) ஆண்ட்ரியா பிரான்ஸியா, லத்தீன் மொழியில் வாசித்தார். அதன் ஆங்கில மொழிபெயர்ப்பை அருட்திரு வின்சென்ட் சின்னதுரையும் தமிழ் மொழிபெயர்ப்பை திருத்தல அதிபர் அருட்திரு இ.அருளப்பாவும் வாசித்தனர்.

இதைத்தொடர்ந்து, பெசன்ட் நகர் ஆலயம் பசிலிக்காவாக உயர்த்தப்படுவதாக பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அப்போது ஆலய மணிகள் ஒலித்தன. ஆலயத்தில் கூடியிருந்த அனைவரும் கைதட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

பசிலிக்கா பெருவிழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் மதுரை உயர் மறைமாவட்ட முன்னாள் பேராயர் அந்தோணி பாப்புசாமி, வேலூர், நீலகிரி, சிவகங்கை உள்பட பல்வேறு மறை மாவட்டங்களின் ஆயர்கள், முன்னாள் ஆயர்கள், பாதிரியார்கள், கன்னியாஸ்தீரிகள், இறைமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

தமிழகத்தில் ஏற்கெனவே சாந்தோம் பேராலயம், வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயம், பூண்டி மாதா பேராலயம், தூத்துக்குடி பனிமய மாதா பேராலயம் உள்பட 11 பேராலயங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT