தேரோட்டம்

 
ஆன்மிகம்

அரியலூர் - கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்!

பெ.பாரதி

அரியலூர்: அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சியில் உள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த கோயிலாகும். இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ராமநவமி அன்று கொடியேற்றம் நடைபெற்று தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நிகழாண்டுக்கான திருவிழா மார்ச் 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நாள் தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

          

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (ஏப்.4) நடைபெற்றது. அதிகாலை 5.30 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து, பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியே சென்று நிலையை அடைந்தது. விவசாயிகள் தங்கள் நிலங்களில் விவசாயம் செழிக்க வேண்டும் என இந்த கோயிலில் வேண்டுதலை வைத்து, சாகுபடி முடிந்து தங்கள் வயலில் விளைந்த நெல், கம்பு, சோளம், மிளகாய், கடலை உள்ளிட்ட தானியங்களையும், கால்நடைகளையும் காணிக்கையாக செலுத்துவர்.

எனவே, விழாவின் போது இந்த கோயிலில் கூட்டம் அதிகமாக காணப்படும். மேலும், திருவிழாவை காண திருச்சி, தஞ்சாவூர், நாகை, சேலம், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்வர். இதனால், அரியலூரிலிருந்து இந்த கோயிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. நாளை ஏகாந்த சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் ஆதீன பரம்பரை தர்மகர்த்தாக்கள் கமலா ராமச்சந்திரா, கோ.ராமதாஸ், கோ.வெங்கடாஜலபதி குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT