பழநியில் வைகாசி விசாகத் தேரோட்டம் நேற்று நடந்தது. (உள்படம்) தேரில் எழுந்தருளிய வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி. படங்கள்: நா.தங்கரத்தினம்
பழநி: திருச்செந்தூர், பழநி உள்ளிட்ட முருகனின் அறுபடை வீடிகளிலும் நேற்று வைகாசி விசாகத் திருவிழா கோலகலமாக நடைபெற்றது.
பழநி தண்டாயுதபாணி சுவாமிகோயிலின் உப கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா மே 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வைகாசி விசாகத் திருவிழா தேரோட்டம் நேற்று மாலை கோலாகலமாக நடைபெற்றது. சுவாமி தேரில் எழுந்தருளியதைத் தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதானைகள் நடைபெற்றன.
தொடர்ந்து, மாலை 4.30 மணிக்கு விநாயகர் மற்றும் வீரபாகு சுவாமி தேர்கள் முன் செல்ல, வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி தேரை, ‘கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா’ என்ற கோஷம் முழங்க திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். ஜூன் 2-ம் தேதி காலை திருவூடல் நிகழ்ச்சி நடைபெறும். அன்று இரவு கொடியிறக்குதலுடன் விழா நிறைவு பெறுகிறது.
இதேபோல் திருச்செந்தூரில் வைகாசி விசாக பெருந்திருவிழாவை முன்னிட்டு நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை 1 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடந்தது. மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடந்ததும், சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் வந்து சேர்ந்தார். அங்கு முனிகுமாரர்களின் மகன்களுக்கு சாபவிமோச்சனம் அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
அதிகாலை 1 மணி முதலே பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதயாத்திரையாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். மேலும் அங்கப்பிரதட்சணம் செய்தும், அலகு குத்தியும், காவடி, பால் குடம் எடுத்தும் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டதால் பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா தலைமையில் 2 ஏடிஎஸ்பி-க்கள், 5 டிஎஸ்பி-க்கள் என சுமார் 1,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.