திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மதுரை: திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வைகாசி விசாகத்தையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி வசந்த உற்சவம் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. 10-ம் நாளான நேற்று வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி அதிகாலை 4.30 மணியளவில் நடை திறக்கப்பட்டது. அதிகாலை 5.30 மணியளவில் சண்முகர், வள்ளி, தெய்வானை, மூலவர் கரத்திலுள்ள தங்க வேலுக்கு சிறப்பு பாலபிஷேகம் நடந்தது. பின்னர் வள்ளி, தெய்வானையுடன் சண்முகர் புறப்பாடாகி காலை 6 மணியளவில் விசாக குறடு மண்டபத்தில் எழுந்தருளினார்.
இங்கு ஆண்டுக்கொருமுறை வைகாசி விசாகத்தன்று மட்டுமே சுவாமி எழுந்தருள்வது சிறப்பம்சமாகும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து பால்குடம் எடுத்து வந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்களிடமிருந்து பெறப்பட்ட பாலால் சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் பலர் அலகு குத்தியும், காவடி எடுத்தும் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சிலர் பறவைக்காவடி எடுத்து வந்தனர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால், 16 கால் மண்டபம் பகுதியிலிருந்து இருவரிசை களில் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வரிசையில் நின்ற பக்தர்கள் சிலர் மயக்கமடைந்ததாகக் கூறப்படுகிறது. கோயில் வளாகத்திலுள்ள மருத்துவ முகாம்களில் பலர் முதலுதவி சிகிச்சை பெற்றனர்.
இதுகுறித்து கோயில் துணை ஆணையர் ரா.ஞானசேகரன் கூறும்போது, ‘‘பார்த்தசாரதி (65) என்ற பக்தர் விரதமிருந்து கோயிலுக்கு வந்ததால் உடலில் சர்க்கரையின் அளவு குறைந்து மயக்கமடைந்தார். அவருக்கு கோயில் வளாகத்திலுள்ள மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல் நிலை சீராக உள்ளது. வேறு யாரும் சிகிச்சைக்கு வரவில்லை. இது தொடர்பாக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர், ஆணையர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்துள்ளோம்’’ என்று கூறினார்.
டிடிவி தினகரன் கண்டனம்: இதற்கிடையே, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘நிமிடத்துக்கு நிமிடம் ரீல்ஸ் போட்டு தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும் தவெக அரசுக்கு, வைகாசி விசாக நிகழ்வுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவார்கள் என்பது தெரிந்திருந்தும், அவர்களுக்கான அடிப்படை வசதிகளைக் கூட செய்து தரதவறியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இனி வரும் காலங்களில், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுடன் கூடிய முன்னேற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை யும், தமிழக அரசும் செய்ய வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.