ஆன்மிகம்

ஹஜ் பயணம் மேற்கொள்ள ஜன.15-க்குள் பதிவு செய்ய அழைப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு ஹஜ் ஏற்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் முகமது ரஃபீக், செய்தித் தொடர்பாளர் மவுலானா ஷம்சுதீன் ஆகியோர் கூறியதாவது: தனியார் நிறுவனங்கள் மூலம் ஹஜ் பயணம் செல்வோர் ஹஜ் காலத்துக்கு 10 நாட்கள் முன்பு வரை பதிவு செய்து பயணித்து வந்தனர்.

ஆனால் இந்த ஆண்டுமுதல், ஹஜ் காலத்துக்கு 5 மாதங்களுக்கு முன்பே பதிவு செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 2026-ம் ஆண்டுக்கு ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் ஜன.15-ம் தேதிக்குள் தங்களது பயணப் பதிவை முடித்துக் கொள்ள வேண்டும்.

அதற்கு பிறகு பதிவு செய்பவர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள இயலாது. ஹஜ் பயணிகளால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள ஏதுவாக சவுதி அரசு இவ்வாறு கால நிர்ணயம் செய்துள்ளது. அதையே மத்திய அரசு பின்பற்றுகிறது.

மேலும் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட தனியார் ஹஜ் ஏற்பாட்டாளர்களை மட்டுமே மக்கள் தேர்வு செய்ய வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட ஏற்பாட்டாளர்கள் மத்திய அரசின் உரிமம் பெற்று இருப்பர், பதிவு செய்வதற்கு முன்அதனை மக்கள் உறுதி செய்ய வேண்டும்.

தமிழக அரசு கட்டி வரும் ஹஜ் இல்லத்தை நிர்வகிக்கும் பொறுப்பை எங்கள் சங்கத்துக்கு வழங்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT