திருவாவடுதுறை ஆதீனகர்த்தர்
கும்பகோணம்: ரூ.5 ஆயிரம் வழங்கி தமிழக முதல்வர் புண்ணியம் செய்துள்ளார் என்றும், தர்மம்தான் நம்மை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும் என்று திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் பாராட்டிஉள்ளார்.
கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலில் தேரோடும் வீதிகளில் ரூ.5 கோடி மதிப்பில் மின் புதைவடம் அமைக்கும் திட்டத் தொடக்க விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
மின் புதைவடம் பதிக்கும் பணி
அமைச்சர் கோவி.செழியன் முன்னிலையில் பூஜிக்கப்பட்ட செங்கலை வழங்கி, திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகாசந்நிதானம் ல அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மின் புதைவடம் பதிக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது: கோயில்களில் விளக்கு ஏற்றுவது புண்ணியம். திருமறைக்காட்டில் அணையும் நிலையில் இருந்த விளக்கின் திரியை எலி ஒன்று தூண்டிவிட்டதால், அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாக இறைவன் பிறக்கச் செய்து பெருமைப்படுத்தினார் என்று கூறப்படுவது உண்டு.
அதன்படி, திருவிடைமருதூர் நான்கு வீதிகளிலும் தடையின்றி மின்விநியோகம் இருக்கும் வகையில் மின் புதைவடம் பதிக்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
அன்னதானத் திட்டம்...
தமிழகத்தில் நல்லாட்சியை முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். எந்தச் சூழ்நிலையிலும் பாவம் செய்யாமல், பிறருக்கு உதவி செய்ய வேண்டும். தர்மம் செய்தால் புண்ணியம். பாவம் செய்தால் துன்பம். நாம் என்ன செய்கிறோமோ, அதுவே நமக்கு திரும்ப கிடைக்கும்.
கோயில்களில் அன்னதானத் திட்டத்தை ஆட்சியாளர்கள் தொடர்ந்து நடத்தி வருவது பாராட்டுக்குரியது. எல்லோருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.5 ஆயிரம் வழங்கி புண்ணியம் செய்துள்ளார். இலவசம் கொடுப்பதும் தர்மம் தான். அதுதான் நம்மை உயர்ந்த நிலைக்கு அழைத்துச்செல்லும். இவ்வாறு அவர் கூறினார்.