திருவண்ணாமலை: பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும் திகழ்வது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். இங்கு நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்புமிக்கது.
இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா நவ.15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விநாயகரும், சந்திரசேகரரும் தினமும் காலை உற்சவத்திலும், விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத முருகர், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் இரவு உற்சவத்திலும் தனித்தனி வாகனங்களில் வீதியுலா வந்தனர். விழாவின் 7-ம் நாளான நவ.21-ம் தேதி மகா தேரோட்டம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வாக, மகா தீபம் நேற்று மாலை ஏற்றப்பட்டது. இதற்காக, மகாதீப கொப்பரைக்கு கோயில் வளாகத்தில் நேற்று முன்தினம் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. நேற்று அதிகாலை கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
அண்ணாமலையார் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் அதிகாலை 4 மணிக்கு ஏகன் அநேகன் தத்துவத்தை எடுத்துரைத்து பஞ்சபூதங்களும் நானே என்பதை இறைவன் உணர்த்தும் வகையில் பரணி தீபத்தை சிவாச்சாரியார்கள் ஏற்றினர். பின்னர், அந்த தீபத்தைக் கொண்டு ஐந்து மடக்குகளில் தீபம் ஏற்றினர்.
மாலை 4 மணி முதல் அண்ணாமலையார் கோயில் 3-ம் பிரகாரத்தில் கொடிமரம் முன்பு உள்ள தீபதரிசன மண்டபத்தில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத முருகர், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். ஆணும், பெண்ணும் சமம் என்ற தத்துவத்தை உணர்த்த உமையாளுக்கு தனது இடபா கத்தை வழங்கிய அண்ணாமலையார் ‘அர்த்தநாரீஸ்வரர்’ கோலத்தில் ஆனந்த தாண்டவத்துடன் மாலை 5.50 மணி அளவில் தங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.
ஆண்டுக்கு ஒரு முறை மகா தீபத்தன்று மட்டுமே சில நிமிடங்கள் காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரரை பக்தர்கள் தரிசித்தனர். அப்போது, கொடிமரம் அருகே அகண்ட தீபம் ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு கோயிலுக்கு பின்புறம் உள்ள 2,668 அடி மலை உச்சியில் பருவதராஜ குல வம்சத்தினர் மகா தீபத்தை ஏற்றினர். அப்போது, கோயிலிலும், கிரிவலப் பாதையிலும் திரண்டிருந்த பக்தர்கள், ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என விண்ணதிர முழக்கமிட்டனர். மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டதும், கோயிலின் நவ கோபுரங்கள் மற்றும் வளாகங்களில் மின்விளக்குகள் அலங்காரம் ஜொலித்தன. அதைத் தொடர்ந்து கோயில்கள், வீடுகளில் பக்தர்கள் அகல் விளக்கு ஏற்றினர்.
தீபத் திருவிழாவையொட்டி 14 கி.மீ. தொலைவுள்ள தீபமலையை சுற்றி அதிகாலையில் இருந்து பக்தர்கள் கிரிவலம் சென்றனர். நகரில் அவ்வப்போது சாரல் மழை பெய்தபோதும், பக்தர்கள் அதை பொருட்படுத்தாமல் கிரிவலம் சென்றனர்.
தீபத் திருவிழா நிறைவடைந்த நிலையில், இன்று முதல் 3 நாட்களுக்கு இரவு ஐயங்குளத்தில் சந்திரசேகரர், பராசக்தி அம்மன், சுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும், 26-ம் தேதி அதிகாலை உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் கிரிவலம் செல்லும் நிகழ்வும் நடைபெறும். 28-ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் தீபத் திருவிழா நிறைவு பெறுகிறது.
மகா தீப விழாவில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன், அமைச்சர்கள் ரமேஷ், சம்பத்குமார், ஆட்சியர் வந்தனா கார்க், கோயில் இணை ஆணையர் பரணிதரன், தக்கார் மீனாட்சி சுந்தரம் கலந்துகொண்டனர்.
மாநகரம் முழுவதும் 15,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஏஐ தொழில்நுட்ப வசதியுடன் கூடிய 1,180 அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
பரணி தீபம் ஏற்றும் நிகழ்வில் உள்ளூர் பக்தர்கள் 500, பிற மாவட்ட பக்தர்கள் 500 பேருக்கும், மகா தீபத்துக்கு உள்ளூர் பக்தர்கள் 1,000, வெளிமாவட்ட பக்தர்கள் 1,000 என 2 ஆயிரம் பேருக்கும் இலவச அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டன. மொத்தம் 8,500 பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
11 நாள் காட்சி தரும் மகா தீபம்
மொத்தம் 3,500 கிலோ நெய் மற்றும் 1,500 மீட்டர் காடா துணிகளை பயன்படுத்தி மகா தீபம் ஏற்றப்பட்டது. கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் மலையேற பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மலைமீது ஏற்றப்பட்ட மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும்.