திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி தங்க கோபுரத்துக்கு ஊற்றப்பட்ட புனிதநீர். (அடுத்த படம்) சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள்.
திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் சிவகங்கை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட சவுமிய நாராயணப் பெருமாள் கோயில் உள்ளது. 108 வைணவத் தலங்களில் ஒன்றான இக்கோயில் மூலவர் கோபுரம் 108 அடி உயரத்தில் அஷ்டாங்க விமானமாக உள்ளது.
இது ‘ஓம் நமோ நாராயணாய’ எனும் மந்திரத்தை உணர்த்தும் வகையில் 3 தளங்களாக உள்ளன. இதில் உச்சியில் உள்ள தளமான முதல் நிலைக்கு தங்கத் தகடு வேயும் திருப்பணி நடைபெற்றது. மொத்தம் 32 கிலோ அளவிலான தங்கத் தகடு வேயப்பட்டது. திருப்பணி முடிந்த நிலையில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி, கடந்த 1-ம் தேதி முதல் பல்வேறு சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் நடைபெற்றன. நேற்று காலை 8 மணிக்கு யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. காலை 9.55 மணிக்கு மூலவர் தங்க விமான கும்பத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அமைச்சர் கேஆர்.பெரிய கருப்பன், சிவகங்கை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார், மேலாளர் இளங்கோ, இலங்கை முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான், அறக்கட்டளைத் தலைவர்காந்தி, திருப்பணிகள் குழுத் தலைவர் ராஜ்மோகன் அருணகிரி, துணைத் தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் ராம் பட்டாச்சாரியர், பொருளாளர் கதிர்வேலன், கவுரவத் தலைவர்கள் மணிகண்டன், ராமேசுவரன், பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.