கோவை: ஈஷாவில் நடப்பாண்டும் பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஈஷாவில் பொங்கல் விழா ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பொது மக்கள், தன்னார்வலர்கள் மற்றும் ஈஷாவைச் சுற்றியுள்ள பழங்குடி கிராம மக்கள் இணைந்து வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி, நடப்பாண்டும் பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நடப்பாண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் மண் பானைகளில் பொங்கல் வைக்கும் நிகழ்வோடு நேற்று தொடங்கியது. இதில் ஈஷாவைச் சுற்றியிருக்கும் பழங்குடி மக்கள், தன்னார்வலர்கள், ஆசிரமவாசிகள் என ஆயிரக்கணக்கானோர் இணைந்து பானைகளில் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.
இயற்கை விவசாயத்தில் அத்தியாவசியமானதாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஈஷாவில் பராமரிக்கப்படும் நாட்டு மாடுகளுக்கு சிறப்பான முறையில் வழிபாடுகள் செய்யப்பட்டன. முன்னதாக வெளிமாநில மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஈஷா தன்னார்வலர்கள் சிலம்பம் சுழற்றி அசத்தினர்.
மேலும், மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, அருகி வரும் நாட்டு மாடு இனங்களான காங்கேயம், ஓங்கோல், காங்கிரிஜ், உம்பளாச்சேரி, கிர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளின் கண்காட்சி நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, மாலையில் கோவையைச் சேர்ந்த 'அலமேலு மங்கம்மாள் கலைக்குழுவினரின்' கரகாட்டம், கட்டைக்கால் ஆட்டம், காவடி ஆட்டம், மயில் ஆட்டம், மாடு ஆட்டம் உள்ளிட்ட தமிழர் பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இவ்விழா இரவு 7 மணியளவில் ஆதியோகி திவ்ய தரிசனத்துடன் நிறைவுப்பெற்றது. பொங்கல் விடுமுறை நாட்களை முன்னிட்டு கடந்த இருநாட்களாக ஆயிரக்கணக்கான மக்கள் ஈஷா யோக மையத்திற்கு வருகை தந்தனர்.