ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்
ஸ்ரீவில்லிபுத்தூர்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தமிழகத்தில் முதல் கோயிலாக ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அதிகாலை 5.30 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டு, பெரிய பெருமாள், ஆண்டாள் ரெங்கமன்னார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
108 வைணவ திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற ஶ்ரீவில்லிபுத்தூர் திருமால் வடபதரசாயி எனும் நாமத்திலும், பூமாதேவி ஆண்டாள் நாச்சியாராகவும், கருடாழ்வார் பெரியாழ்வாரகவும் அவதரித்த சிறப்புமிக்கது. ஶ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் மகளாக வளர்ந்த ஆண்டாள் மார்கழி மாதத்தில் திருப்பாவை பாடி பாவை நோன்பிருந்து ஶ்ரீரங்கம் ரெங்கநாதரை திருமணம் செய்தார்.
இங்கு கருவறையில் ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார் ஒரு சேர நின்ற கோலத்தில் காட்சியளிக்கின்றனர். ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தாக ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் நடக்கும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பு பெற்றதாகும். ஶ்ரீவில்லிபுத்தூரில் மார்கழி நீராட்ட விழாவில் பகல் பத்து உற்சவம் டிசம்பர் 19- ம் தேதி பச்சை பரப்புதல் வைபவத்துடன் தொடங்கியது. 10 நாட்களும் ஆண்டாள் ரெங்கமன்னார், ஶ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள் உடன் பகல் பத்து மண்டபத்தில் எழுந்தருளி காட்சி அளித்தார்.
ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை 5.30 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டது.
பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர் உள்ளிட்ட ஆழ்வார்கள் முன்னின்று வரவேற்க மூலவர் வடபத்ரசாயி (பெரிய பெருமாள்) முன் செல்ல, அதன்பின் ஆண்டாள் ரெங்கமன்னார் பரமபத வாசல் கடந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
அதன்பின் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரமபத வாசல் வழியாக சென்று ராப்பத்து மண்டபத்தில் பெரிய பெருமாள், ரெங்கமன்னார் சமேதரராக காட்சியளித்த ஆண்டாள் நாச்சியாரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர், விருதுநகர் எஸ்.பி கண்ணன், முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். டி.எஸ்.பி ராஜா தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.