பழநி தைப்பூசத் திருவிழாவையொட்டி பெரியநாயகியம்மன் கோயில் அருகே ரத வீதியில் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த தேர். (உள்படம்) தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி. | படங்கள்: நா.தங்கரத்தினம் |
பழநி: பழநி தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை கோலாகலமாக நடைபெற்றது. ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என்ற முழக்கத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபகோயிலான பெரியநாகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா ஜன. 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி வெள்ளி ஆட்டுக்கிடா, காமதேனு, தந்தப் பல்லக்கு, தங்க மயில் உள்ளிட்ட வாகனங்களில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாணம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி மணக்கோலத்தில் வெள்ளித்தேரில் வீதி உலா வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டம் நேற்று மாலை கோலாகலமாக நடைபெற்றது.
தைப்பூசத்தையொட்டி நேற்று அதிகாலை முதலே வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பழநியில் திரண்டனர். ஆறு மணி நேரம் வரிசையில் காத்திருந்து பழநி மலைக்கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தைப்பூசத் தேரோட்டத்தையொட்டி, பெரியநாயகியம்மன் கோயிலில் காலை 5 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி தோளுக்கினியானில் சண்முகநதிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 11.15 மணிக்கு மேல் மேஷ லக்னத்தில் சுவாமி தேரில் எழுந்தருளினார். சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.
தொடர்ந்து, மாலை 4.30 மணிக்கு விநாயகர் மற்றும் வீரபாகு சுவாமி தேர் முன்னால் செல்ல வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி தேரை ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என்ற முழக்கத்துடன் ரத வீதிகளில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். பின்னர், ரத வீதிகளை சுற்றி வந்த தேர், மாலை 5.45 மணிக்கு நிலையை அடைந்தது.
விழாவில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன், பழநி எம்எல்ஏ செந்தில்குமார், கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, கந்தவிலாஸ் உரிமையாளர் செல்வகுமார், கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து, சரவணப் பொய்கை கந்தவிலாஸ் உரிமையாளர் பாஸ்கரன் மற்றும் அறங்காவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருவிழாவையொட்டி, 3,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வரும் 4-ம் தேதி இரவு தெப்பத் திருவிழா, கொடி இறக்குதல் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
நெரிசலில் சிக்கி பக்தர்கள் மயக்கம்: உதவிய போலீஸார் - தைப்பூசத்தையொட்டி நேற்று அதிகாலை 2 மணி முதல் பழநி மலைக் கோயிலுக்குச் செல்லும் பாதையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நேரம் செல்லச்செல்ல பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்தது.
கூட்டத்தைச் சமாளிக்க முடியாமல் போலீஸார், அறநிலையத் துறை அதிகாரிகள் திணறினர். கூட்டம் அதிக அளவில் இருந்ததால் மலைப் பாதையில் பக்தர்களை போலீஸார் அணி அணியாகப் பிரித்து அனுப்பினர். இருப்பினும், பக்தர்கள் ஒருவருக்கு ஒருவர் முந்திச் செல்ல முயன்றதால் கடும் நெரிசல் ஏற்பட்டது.
இதன் காரணமாகவும், நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்ததாலும் பக்தர்கள் பலர் மயங்கி விழுந்தனர். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார், மயங்கி விழுந்தவர்களை மீட்டு தோளில் சுமந்தபடி மருத்துவ முகாமுக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. தரிசனத்துக்காக பல மணி நேரம் வரிசையில் காத்திருக்க நேரிட்டதால், போதிய குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லாமல் பக்தர்கள் பலர் சிரமத்துக்கு உள்ளாகினர்.