திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தான பராமரிப்பில் திருப்பதி - சென்னை வழிதடத்தில் நாராயணவனம் எனும் ஊரில் வேதவல்லி தாயார் சமேத வேத நாராயணர் கோயில் உள்ளது.
கிருத யுகத்தில் மகா விஷ்ணு, முதல் அவதாரமான மச்ச அவதாரம் எடுத்து, சோமுகன் எனும் ராட்சதனுடன் போராடி வேதங்கள், சப்த ரிஷிகளையும் காத்தார் என்பது புராண வரலாறு. அதன்படி இந்த தலத்தில் அவர் மச்ச அவதாரம் எடுத்து தண்ணீருக்குளேயே போர் புரிந்ததால், ஈரமாக இருந்த மகா விஷ்ணுவின் உடல் மீது சூரிய கதிர்கள் மூலம் சூரிய பகவான் வழிபட்டார் என்பது தல வரலாறு.
ஆதலால் ஆண்டுதோறும் மார்ச் மாதம் இக்கோயிலில் சூரிய விழா நடைபெறும். இதன்படி வரும் 24 முதல் 28ம் தேதி வரை சூரிய பூஜை நடைபெற உள்ளது. முதல் 3 நாட்கள் மாலையில் சூரிய பூஜை 5.30 - 6.30 மணி வரை நடைபெறும்.
முதல் நாள் இக்கோயிலின் முகப்பு கோபுரம் அமைந்துள்ள கோபுர அடுக்குகள் வழியாக சூரிய கதிர்கள் உள்ளே சென்று 630 அடி தூரத்தில் உள்ள கோயில் கர்ப்ப கிரகத்தில் சுவாமியின் பாதத்தில் விழும்.
இதையடுத்து 2ம் நாள் சுவாமியின் நாபியின் மீதும் 3-ம் நாள் சிரசு மீதும் சூரிய கதிர்கள் படும். 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை தினமும் மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை தெப்போற்சவமும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்து வருகிறது.