ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரிய பெருமாள் அவதார உற்சவமான புரட்டாசி பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை செப்பு தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
108 வைணவ திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மூலவர் வடபத்ரசாயி (பெரிய பெருமாள்), பெரியாழ்வார், ஆண்டாள் ஆகிய மூவர் அவதரித்த சிறப்புடையதால் முப்புரி ஊட்டிய தலம் என அழைக்கப்படுகிறது.
பெரிய பெருமாள் அவதரித்த புரட்டாசி திருவோணம், பெரியாழ்வார் அவதரித்த ஆனி சுவாதி, ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம் ஆகிய திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு புரட்டாசி பிரம்மோற்சவ விழா செப்டம்பர் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பிரமோற்சவ விழாவில் தினசரி இரவு பெரிய பெருமாள் சந்திரபிரபை, அனுமன், யானை, தங்க சேஷ வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். இதில் 5-ம் நாள் விழாவில் கருட சேவையும், 6-ம் தேதி மாலை 3 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள் திருக்கல்யாணமும், 7-ம் நாளில் சயன சேவையும் நடைபெற்றது.
9-ம் நாள் விழாவான இன்று காலை பெரிய பெருமாள் அவதரித்த திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு செப்பு தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக ஶ்ரீ தேவி பூதேவி சமேத பெரிய பெருமாளுக்கு விஷேச திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்பின் சர்வ அலங்காரத்தில் பெரிய பெருமாள் ஶ்ரீதேவி பூதேவி சமேதரராக செப்புத் தேரில் எழுந்தருள தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து 4 ரத வீதிகள் வெளியாக தேர் இழுத்தனர்.
வைணவ ஆச்சார்யர்கள் திருப்பல்லாண்டு பாடியபடி ஊர்வலமாக முன் செல்ல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். செயல் அலுவலர் சக்கரையம்மாள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்தனர்.