ஆன்மிகம்

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா: பகல்பத்து உற்சவம் கோலாகல துவக்கம்

எம்.கே.விஜயகோபால்

திருச்சி: உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல்பத்து உற்சவம் இன்று காலை கோலாகலமாக தொடங்கியது.

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நேற்று மாலை மூலஸ்தானத்தில் திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. இந்நிலையில், பகல்பத்து உற்சவம் இன்று காலை தொடங்கியது.

பகல்பத்து உற்சவத்தின் முதல்நாளான இன்று, நம்பெருமாள் நீள்முடி கிரீடம், வைர அபயஹஸ்தம், மார்பில் மகாலட்சுமி பதக்கம், முத்துச்சரம், அடுக்குப்பதக்கம், காசுமாலை உள்ளிட்ட திருவாபரணங்களை சூடி, மூலஸ்தானத்தில் இருந்து தங்க பல்லக்கில் புறப்பாடாகி பிரகாரங்களில் வலம்வந்து, பின்னர் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

தொடர்ந்து நாலாயிர திவ்யபிரபந்த பாடல்களை நம்பெருமாள் முன் அரையர்கள் அபிநயத்துடன் இசைத்து பாடினர். அர்ச்சுன மண்டபத்தில் ஆஸ்தானமிருந்த நம்பெருமாள், இரவு 7.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். இன்று முதல் தொடர்ந்து 10 நாட்கள் பகல்பத்து உற்சவம் நடைபெற உள்ளது.

பகல்பத்து துவக்க நாளான இன்று பெருந்திரளான பக்தர்கள் நம்பெருமாளையும், ஆழ்வார்களையும் வழிபட்டு சென்றனர். வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய விழாவான சொர்க்கவாசல் திறப்பு எனப்படும் பரம்பதவாசல் திறப்பு வரும் டிசம்பர் 30-ம் தேதி அதிகாலை 5.45 மணிக்கு நடைபெற உள்ளது.

SCROLL FOR NEXT